Published : 14 Sep 2022 12:53 PM
Last Updated : 14 Sep 2022 12:53 PM

பள்ளி மாணவர்களை நல்வழிப்படுத்தும் 'சிற்பி' திட்டம் எப்படி செயல்படும்? - முழு விவரம்

சிற்பி திட்டத்தைத் தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின்

சென்னை: பள்ளி மாணவர்களை நல்வழிப்படுத்தும் “சிற்பி” திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னை பெருநகர காவல்துறை சார்பில் பள்ளி, மாணவர்கள் ஒழுக்கத்திலும் கல்வியிலும் மேலும் சிறந்து விளங்கவும், நாட்டுப்பற்றுடன் நல்ல பண்புகளை வளர்த்துக் கொள்ளவும், நல்வழிப்படுத்தவும் ஏற்படுத்தப்பட்டுள்ள ‘சிற்பி‘ (SIRPI – Students In Responsible Police Initiatives) என்ற புதிய திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இந்தத் திட்டம் செயல்படும் விதம் தொடர்பாக முழுமையான விவரம்: முதற்கட்டமாக 100 அரசு பள்ளிகளில் 8 ஆம் வகுப்பு பயிலும் 50 மாணவர்கள் விருப்பத்தின்பேரில் தன்னார்வலர்களாக தேர்வு செய்யப்படுவார்கள்.

இவர்களுக்கு நற்பண்புகள் மற்றும் உடற்பயிற்சி குறித்த வகுப்புகள் நடத்தப்படும்.

இவர்கள் 8 சுற்றுலா தலங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டு கல்வி, வரலாறு, பொது அறிவு குறித்து எடுத்துரைக்கப்படும்.

உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்காக, விளையாட்டுப் பயிற்சி, உடற்பயிற்சி, கவாத்து ஆகியவையும் கற்றுக் கொடுக்கப்படும்.

நல்லொழுக்கம், நாட்டுப்பற்று, தேசிய ஒற்றுமை, பிறருக்கு உதவுதல், தாம் கற்ற கல்வியையும், கண்டு களித்த வரலாற்று சிறப்புமிக்க இடங்கள் மற்றும் நல்ல அனுபவங்கள் குறித்து பிறருக்கு கற்றுத் தருதல் போன்ற நல்ல பண்புகளை வளர்க்க இச்சிறப்பு வகுப்புகள் உதவும்.

தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு, பொதுமக்கள் அமைதியாக வாழ்வதற்கு உறுதுணையாக இருக்கும் காவல்துறையின் செயல்பாடுகள், அமைப்பு, பணிகள் குறித்தும், அவசர உதவி மையங்கள் மற்றும் அதன் செயல்பாடுகள் குறித்தும், சென்னை பெருநகர காவல் துறையின் செயல்பாடுகள் குறித்தும் எடுத்துரைக்கப்படும்.

இவ்வகுப்புகள் மூலம் அவர்களை சிற்பியாக உருவாக்கி, இந்த சிற்பிகள் மூலம் அப்பள்ளியில் உள்ள மற்ற மாணவர்களுக்கும் நற்பண்புகள் கற்பிக்கப்பட்டு, கல்வி, ஒழுக்கம், விளையாட்டு என அனைத்திலும் சிறந்த மாணவர்களாக அனைவரையும் உருவாக்குவதே 'சிற்பி' திட்டத்தின் நோக்கமாகும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x