Published : 14 Sep 2022 04:21 AM
Last Updated : 14 Sep 2022 04:21 AM

சுற்றுச்சூழல் விதிகளை மீறும் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு சீல் - தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் எச்சரிக்கை

சென்னை: தமிழகத்தில் சுற்றுச்சூழல் விதிகளை மீறும் அடுக்குமாடி கட்டிடங்கள், தொழில்நுட்ப பூங்காக்கள் மற்றும் வணிக வளாகங்களுக்கு சீல் வைக்கப்படும் என்று மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் எச்சரித்துள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் 2006-ம் ஆண்டு வெளியிட்ட சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிக்கையின்படி 20 ஆயிரம் ச.மீட்டருக்கு மேல் கட்டப்படும் கட்டிடங்களின் கட்டுமானப் பணி தொடங்கும் முன்பே சுற்றுச்சூழல் அனுமதி பெறவேண்டும்.

அதன்படி தமிழகத்தில் 20 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவுக்கு மேல் கட்டப்படும் அடுக்குமாடி குடியிருப்புகள், தொழில்நுட்ப பூங்காக்கள் மற்றும் வணிக வளாகங்கள் உட்பட அனைத்து கட்டுமான உரிமையாளர்களும் தமிழ்நாடு மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திடம் சுற்றுச்சூழல் அனுமதி பெறவேண்டும். பின்னர், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்திடம் இசைவாணை பெற்ற பின்பு, கட்டுமானப் பணிகளைத் தொடங்க வேண்டும். அதில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளைப் பின்பற்ற வேண்டும்.

மேலும்,கட்டுமானப் பணிகள் முடிந்து, கட்டிடங்கள் பயன்பாட்டுக்கு கொடுப்பதற்கு முன்பு, மாசு கட்டுப்பாடு வாரியத்திடம் இசைவாணை பெற வேண்டும்.

ஆனால் நடைமுறையில், அடுக்குமாடி குடியிருப்புகள், தொழில்நுட்ப பூங்காக்கள் மற்றும் வணிக வளாகங்களில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் சரிவர பராமரித்து இயக்கப்படாமல், சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் அருகில் உள்ள மழைநீர் வடிகால், காலியிடங்கள், நீர் நிலைகள் போன்றவற்றில் வெளியேற்றப்படுவதாக புகார்கள் பெறப்படுகின்றன.

சில இடங்களில் டேங்கர் லாரிகள் மூலம் கழிவுநீர் எடுத்துச் செல்லப்பட்டு சாலையோரங்களில் விடப்படுகின்றன. இதனால் சுற்றுச்சூழல் மாசு அடைகின்றது.

எனவே, 20 ஆயிரம் ச.மீட்டர் பரப்பளவுக்கு மேல் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்புகள், தொழில்நுட்ப பூங்காக்கள்மற்றும் வணிக வளாகங்கள் மாசு கட்டுப்பாடு வாரியத்திடம் இயக்குவதற்கான இசைவாணை பெற்றிருக்க வேண்டும். ஏற்கெனவே வாரிய இசைவாணை பெற்றிருப்பின் அது புதுப்பிக்கப்பட்டு செல்லத்தக்கதாக இருக்க வேண்டும். அதற்கு குறைவான பரப்பளவுள்ள கட்டிடங்களில், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டிருப்பின், அவர்களும் இசைவாணை பெறவேண்டும்.

அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி முடிக்கப்பட்டு, குடியிருப்போர் நல சங்கத்திடம் ஒப்படைக்கப் பெற்றிருப்பின், அச்சங்கங்கள் இசைவாணை பெற வேண்டும்.

மேற்கூறிய விதிகளை மீறும் வளாகங்களை மூடவும், மின் இணைப்பைத் துண்டிக்கவும் சீல் வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். அத்தகைய உரிமையாளர்கள் மீது சுற்றுச்சூழல் இழப்பீட்டுதொகை விதிக்கப்படுவதுடன், நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்படும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x