

திருமங்கலம் பார்முலா பற்றி எனக்கு எதுவும் தெரியாது என உயர் நீதிமன்றத்தில் மு.க.ஸ்டாலின் பதிலளித்தார்.
கடந்த 2011 சட்டப்பேரவைத் தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் வெற்றி பெற்றார். இந்த வெற்றி செல்லாது என அறிவிக்கக்கோரி அவரை எதிர்த்து அதிமுக சார்பில் போட்டியிட்ட சைதை துரைசாமி, சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணைக்காக நேற்று 4-வது முறையாக நீதிபதி எம்.வேணுகோபால் முன்பு மு.க.ஸ்டாலின் ஆஜராகி பதிலளித்தார்.
அப்போது ஸ்டாலினிடம், ‘‘திருமங்கலம் பார்முலா அடிப்படையில் கொளத்தூர் தொகுதியிலும் வாக்காளர்களுக்கு சரளமாக பணம் பட்டுவாடா செய்யப்பட்டதா?’’ என சைதை துரைசாமி தரப்பு வழக்கறிஞர்கள் கேட்டனர். அதற்கு, “திருமங்கலம் பார்முலா என்றால் என்ன என்று புரியவில்லை. எனக்கு அதுபற்றி எதுவும் தெரியாது. நான் பணம் பட்டுவாடா செய்ததாக கூறுவதை மறுக்கிறேன்’’ என ஸ்டாலின் பதிலளித்தார்.
எஸ்ஆர்எம்யு பொதுச் செயலாளர் கண்ணையா, வழக்கறிஞர் கிரிராஜன், வட்டச் செயலாளர் பன்னீர்செல்வம், ஏசுதாஸ் ராஜன் ஆகியோரைத் தெரியுமா? அவர்கள் மூலமாக பணம் பட்டுவாடா செய்யப்பட்டதா? ஈஸ்வரி மருத்துவமனை, பிருந்தா தியேட்டரில் என்ன நடந்தது என்பது தெரியுமா? என ஸ்டாலினிடம் 30-க்கும் மேற்பட்ட கேள்விகள் கேட்கப்பட்டது. இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்த ஸ்டாலின், மனுதாரர் அரசியல் ரீதியாக பழிவாங்கும் நோக்கில் இந்த வழக்கை தொடர்ந்துள்ளார் என்றார்.
சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நடந்த இந்த குறுக்கு விசாரணை நேற்றுடன் முடிவடைந்தது. இதையடுத்து இந்த வழக்கு, வழக்கறிஞர்களின் வாதத்துக்காக டிசம்பர் 8-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.