

வங்கிகள் 2 நாட்கள் விடுமுறைக்குப் பிறகு இன்று திறக்கப்படுகின்றன. பொதுமக்களுக்கு தட்டுப்பாடின்றி பணத்தை வழங்க வங்கிகள் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன.
500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளின் பணமதிப்பை நீக்கி மத்திய அரசு கடந்த 8-ம் தேதி உத்தரவிட்டது. பொதுமக்கள் தங்களிடம் உள்ள பழைய ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் என்றும் அறிவித்தது. இதனால் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்ற வங்கிகளில் கூட்டம் அலைமோதுகிறது. ஆனால், மக்களுக்கு வழங்க போதிய பணம் இல்லாததால் வங்கிகள் திணறி வருகின்றன. மேலும் 500 மற்றும் 100 ரூபாய் நோட்டுகள் போதிய அளவு விநி யோகிக்கப்படாததால் சில்லறைத் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. பணத்தட்டுப்பாடு காரணமாக கடந்த வாரம் பெரும்பாலான ஏடிஎம்கள் மூடப்பட்டிருந்தன.
இதற்கிடையே நாசிக்கில் இருந்து 14 டன் எடையளவு கொண்ட 500 ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்பட்டு சென்னை ரிசர்வ் வங்கிக்கு கொண்டுவரப் பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 2 நாட்கள் விடுமுறைக்குப் பிறகு இன்று வங்கிகள் திறக்கப்படும் நிலையில் பணத்தட்டுப்பாடு பிரச்சினை ஏற்படாமல் இருக்க அனைத்து வங்கிகளுக்கும் 500 ரூபாய் நோட்டுகளை அனுப்பும் பணியில் ரிசர்வ் வங்கி தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதனால் இந்த வாரம் நிலைமை ஓரளவுக்கு சீராகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே, விடுமுறை தினமான நேற்று சென்னையில் பல இடங்களில் பணம் இல்லாத தால் வங்கி ஏடிஎம்கள் மூடப் பட்டிருந்தன. ஒருசில இடங்களில் மட்டும் ஏடிஎம்கள் செயல்பட்டன. அவையும் மதியம் வரை மட்டுமே செயல்பட்டன. இதனால் பொதுமக்கள் பணம் எடுக்க முடியாமல் தவித்தனர்.
அண்ணாசாலையில் வங்கி ஏடிஎம்மில் பணம் எடுக்க வந்த கிருபாகரன் என்பவர் இதுபற்றி கூறும்போது, “சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வங்கி விடுமுறை என்பதால் பணப்பரிவர்த்தனைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
கடந்த 2 நாட்களாக ஏடிஎம்களில் பணம் எடுக்க முடியாமல் தவித்து வருகிறோம். ஒருசில இடங்களில் திறக்கப்பட்ட ஏடிஎம்களிலும் குறைந்த அளவே பணம் இருந்த தால் அவையும் ஒருசில மணி நேரத்தில் தீர்ந்து விட்டது. எனவே இப்பிரச்சினையைத் தீர்க்க அனைத்து வங்கிகளும் ஏடிஎம்களில் போதிய அளவு பணத்தை நிரப்பவேண்டும்” என்றார்.
இதற்கிடையே, புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகளை வழங்குவதற்கு வசதியாக ஏடிஎம் இயந்திரங்களில் உள்ள சாப்ட்வேர்களை மாற்றி அமைக்கும் பணி போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுவரை சுமார் 60 சதவீத இயந்திரங்கள் மாற்றியமைக்கப் பட்டதாகவும், எஞ்சிய ஏடிஎம் இயந்திரங்களும் விரைவில் மாற்றியமைக்கப்படும் என்றும் வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர்.