

சூழ்ச்சி வலையில் இருந்து அதிமுக விடுபடும், என சசிகலா பேசினார். நாமக்கல், ஈரோடு மாவட்டத்தில் நேற்று சுற்றுப்பயணம் மேற்கொண்ட சசிகலா, பள்ளிபாளையத்தில் பேசியதாவது:
சாதி, மத பேதமின்றி எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் அனைவரையும் அரவணைத்துச் சென்றனர். சாதாரண தொண்டர் கூட நம்மை விட்டு விலகக்கூடாது என ஜெயலலிதா விரும்பினார்.
நானும் அவர்கள் வழியில் பயணிக்கிறேன். நாம் அனைவரையும் ஒன்றிணைத்து வலிமையான இயக்கமாக மாற்ற வேண்டும். சூழ்ச்சி வலையில் இருந்து அதிமுக விடுபடும்.
நாம் எத்தனை பிரிவுகளாக செயல்பட்டாலும், நமது நோக்கம், திமுகவை எதிர்ப்பதும், அதிமுகவை வலிமைப்படுத்தி ஆட்சியை ஏற்படுத்துவதுதான். அனைவரையும் ஒரே குடையின் கீழ் கொண்டு வந்து, ஒருங்கிணைந்த அதிமுக-வை உருவாக்கும் வரை நான் ஓய மாட்டேன். என் அருகில் இருந்து ஜெயலலிதா என்னை பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்.
அதிமுகவினரையும் கொங்கு நாட்டு மக்களையும் யாராலும் பிரிக்க முடியாது. அதனால்தான் கொங்கு மக்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்கி வருகிறோம். ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர், ஆட்சியைக் காப்பாற்ற உங்கள் பகுதியைச் சேர்ந்த கழக நிர்வாகியை மாநில முதல்வராக்கினேன்.
எந்த வித பிரதிபலனும் பாராமல் எனது பங்களிப்பை கட்சிக்கு அளித்து வருகிறேன். நானும், ஜெயலலிதாவும் சந்தித்த சோதனைகளை யாரும் சந்தித்து இருக்க மாட்டார்கள். எனவே,
வளரிளம் பெண்கள் எதைக்கண்டும் பயப்படாமல் துணிச்சலுடன் போராட வேண்டும், என்றார்.