பைக் டாக்ஸிகளுக்கு தடை விதிக்க வேண்டும்: ஏஐடியுசி தேசிய செயலாளர் வலியுறுத்தல்

பைக் டாக்ஸிகளுக்கு தடை விதிக்க வேண்டும்: ஏஐடியுசி தேசிய செயலாளர் வலியுறுத்தல்
Updated on
1 min read

சென்னை: ஆட்டோ தொழிலாளர்களின் வாழ்வை பாதுகாக்க பைக் டாக்ஸிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என ஏஐடியுசி தேசிய செயலாளர் வஹிதா நிஜாம் வலியுறுத்தினார்.

ஏஐடியுசி தென்சென்னை மாவட்டம் சார்பில் தமிழக அரசின் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. சென்னை, சைதாப்பேட்டையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தை ஏஐடியுசி தேசிய செயலாளர் வஹிதா நிஜாம் தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் பேசியதாவது: மத்திய பாஜக அரசு தொழிலாளர் விரோதப் போக்கை கடைபிடித்து வருகிறது. அந்த வகையில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள 4 சட்ட தொகுப்புகள் தொழிலாளர் நலனுக்கு முற்றிலும் விரோதமாக உள்ளது. அதனைத் திரும்பப் பெற வலியுறுத்தி, தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.

சாமானிய மக்கள் உட்பட அனைவரும் பாதிப்புக்குள்ளாகும் மின் கட்டண உயர்வைத் திரும்பப்பெற வேண்டும். கட்டுமான அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு வழங்கி வரும் ஓய்வூதியத்தை ரூ.6 ஆயிரமாக உயர்த்தவேண்டும்.

மேலும், தமிழகத்தில் பணிபுரியும் அனைத்து தொழிலாளர்களுக்கும் குறைந்தபட்ச ஊதியமாக ரூ.21 ஆயிரம் நிர்ணயிக்க மாநில அரசு வழிவகை செய்ய வேண்டும்.

ஆட்டோ தொழிலாளர்களின் வாழ்வாதாரம் விலைவாசி உயர்வுஉள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மிகவும் நலிவடைந்துள்ளது. அவர்களை பாதுகாக்க கேரளாவை போன்றே தமிழக அரசும் செயலி மூலம் ஆட்டோ, டாக்ஸிகளை முன்பதிவு செய்யும் வசதியை ஏற்படுத்த வேண்டும்.மேலும் அவர்களின் வருமானத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் பைக்டாக்ஸிகளுக்கு தடை விதிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தென்சென்னை மாவட்டச் செயலாளர் எஸ்.கே.சிவா, ஏஐடியுசி தென் சென்னை மாவட்டத் தலைவர் சி.சீனிவாசன், பொதுச் செயலாளர் ஆர்.அழகேசன் உள்ளிட்டோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். நிகழ்வில், சங்க உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in