காஞ்சிபும் | ஏரிக்கரை மீது கட்டப்பட்ட 86 வீடுகளை அகற்றும் பணி தொடக்கம்: போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் வெளியேற்றம்

காஞ்சிபுரம் பொன்னேரிக்கரை அருகே ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுவதால் தங்கள் உடமைகளுடன் வெளியேறும் பொதுமக்கள்.
காஞ்சிபுரம் பொன்னேரிக்கரை அருகே ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுவதால் தங்கள் உடமைகளுடன் வெளியேறும் பொதுமக்கள்.
Updated on
1 min read

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் சந்நிதி தெரு அருகே பொன்னேரிக்கரையின் ஓரம் பல வீடுகள் கட்டப்பட்டுள்ளன.

நீர் நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றும்படி ஏற்கெனவே நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் இந்த ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நீர்வளத் துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் வந்தனர்.

அப்போது இவர்களை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். இங்கு வீடுகள் இருப்பதால் நீர் நிலைக்கு என்ன பாதிப்பு என்றும் கேள்வி எழுப்பினர்.

இதனைத் தொடர்ந்து மூன்று பேருந்துகள் எடுத்து வரப்பட்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்களை வலுக்கட்டாயமாக போலீஸார் பேருந்தில் ஏற்றி அழைத்துச் சென்றனர். இதனைத் தொடர்ந்து அந்த வீட்டில் இருந்த பொருட்கள் வருவாய் துறையினர் உதவியுடன் எடுத்து வெளியில் வைக்கப்பட்டன. இந்தப் பொருட்களை பொதுமக்கள் அங்கிருந்து வேறு இடங்களுக்கு எடுத்துச் சென்றனர்.

இதனைத் தொடர்ந்து அங்கிருந்த வீடுகள் பொக்லைன் இயந்திரங்கள் உதவியுடன் இடிக்கப்பட்டன. மொத்தம் 86 வீடுகள் ஏரிக்கரையை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருப்பதாக நோட்டீஸ் வழங்கப்பட்டது. இவர்களுக்கு ஏனாத்தூர் பகுதியில் மாற்று இடம் வழங்குவதாகவும் அறிவிக்கப்பட்டது.

பொதுமக்கள் தங்களை இந்தப் பகுதியில் இருக்க அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை மாவட்ட நிர்வாகம் மறுத்துவிட்டது. வழங்கப்பட்ட மாற்று இடத்தில் வீடுகள் கட்டும் வரை அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்கப்படவில்லை.

இதனைத் தொடர்ந்து வீடுகள் இடிக்கும் பணியை அதிகாரிகள் தொடங்கினர். அந்த வீடுகள் இடிக்கப்படும் இடத்தை சுற்றி போலீஸார் குவிக்கப்பட்டனர்.

அந்த வழியாக யாரும் நுழைய அனுமதிக்கப்படவில்லை. இதுகுறித்து அந்தப் பகுதி மக்கள் கூறும்போது, “பல அரசு அலுவலகங்கள், அரசு போக்குவரத்து கழகம் உள்ளிட்டவை நீர் நிலையை ஆக்கிரமித்தே கட்டப்பட்டுள்ளன. ஆனால் ஏழை மக்களின் குடியிருப்புகளை மட்டும் நீர் நிலை ஆக்கிரமிப்பு என்ற பெயரில் அகற்றுகின்றனர்” என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in