Published : 14 Sep 2022 07:10 AM
Last Updated : 14 Sep 2022 07:10 AM
சென்னை: தமிழகத்தின் 12 மாவட்டங்களில் விளிம்பு நிலையில் உள்ள இருளர்கள் உள்ளிட்ட பண்டைய பழங்குடியினருக்கு 1,094 புதிய வீடுகள் கட்ட ரூ.50 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக ஆதிதிராவிடர் நலத் துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஆதிதிராவிடர் நலத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு: விளிம்புநிலை மக்களுக்கான பொருளாதார முன்னேற்றமே அவர்களுக்கான சமூக நீதியாக அமையும் என்பதில் முதல்வர் ஸ்டாலின் உறுதியான நம்பிக்கை கொண்டுள்ளார்.
அதற்கேற்ப, 2022-23-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில், ‘விளிம்பு நிலையில் இருக்கும் இருளர்கள் உள்ளிட்ட பண்டைய பழங்குடியினருக்கு வரும் நிதி ஆண்டில் மேலும் 1,000 புதிய வீடுகள் ரூ.50 கோடியில் கட்டித்தரப்படும்’ என்று அறிவிக்கப்பட்டது.
வீட்டுக்கு ரூ.4.37 லட்சம் வீதம்
இந்த அறிவிப்பை செயல்படுத்தும் வகையில், திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், நீலகிரி,திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கோயம்புத்தூர், கடலூர், தருமபுரி, திருப்பூர் ஆகிய 12 மாவட்டங்களில் சமதள பரப்பில் ஒருவீட்டுக்கு ரூ.4.37 லட்சம் வீதம் 726 வீடுகளுக்கு ரூ.31.76 கோடி,மலைப் பகுதியில் ஒரு வீட்டுக்கு ரூ.4.95 லட்சம் வீதம் 368 வீடுகளுக்குரூ.18.23 கோடி என 1,094 வீடுகள் கட்ட ரூ.49.99 கோடி நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த 1,094 வீடுகளையும் விரைவாக கட்டி முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆதிதிராவிடர் நலத் துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு ஆதிதிராவிடர் நலத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT