

விருதுநகரில் நாளை நடைபெறும் விழாக்களில் முதல்வர் பங்கேற்பதையொட்டி, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அமைச்சர்கள், முதல்வரின் பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியரக பெருந்திட்ட வளாகத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை மூலம், புதிய ஆட்சியர் அலுவலக கட்டிடம் கட்டும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா நாளை (செப்.15) நடைபெறுகிறது.
இவ்விழாவில், முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டு அடிக்கல் நாட்டி கட்டுமானப் பணிகளைத் தொடங்கி வைக்கிறார். ரூ.70.57 கோடியில் 6 தளங்களுடன் மொத்தம் 2.02 லட்சம் சதுர அடி பரப்பளவில் இப்புதிய அலுவலகம் கட்டப்பட உள்ளது.
விழா அரங்கில், பல்துறை பணி விளக்கக் கண்காட்சி அரங்கும் அமைக்கப்படுகிறது. இவ்விழாவில் அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
அதையொட்டி, பாதுகாப்பு ஏற்பாடுகள், பல்துறை பணிவிளக்க கண்காட்சி அரங்கு அமையும் இடம், பார்வையாளர்களை அமர வைப்பது குறித்து அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் நேற்று நேரில் ஆய்வு செய்தனர்.
மாவட்ட ஆட்சியர் ஜெ.மேகநாதரெட்டி, எஸ்.பி. மனோகர் ஆகியோர் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அமைச்சர்களிடம் விளக்கினர். அதைத்தொடர்ந்து, விழா மேடை பாதுகாப்பு குறித்து முதல்வரின் பாதுகாப்புப் பிரிவு போலீஸாரும் ஆய்வு நடத்தினர்.
அதையடுத்து, திமுக முப்பெரும் விழா நடக்கும் பட்டம்புதூரிலும் பாதுகாப்பு ஏற்பாடு குறித்து ஆய்வு நடத்தப்பட்டது.