Published : 07 Nov 2016 09:22 AM
Last Updated : 07 Nov 2016 09:22 AM
வட சென்னை மக்களின் அரை நூற்றாண்டு கனவான கணேசபுரம் மேம்பாலம் தொடர்ந்து கிடப்பில் போடப்பட்டுள்ளதால் சென்னை மாநகரின் மற்ற பகுதிகளிலிருந்து வட சென்னை தனித்து விடப்பட்டுள்ளது.
சென்னை மாநகரம் வட சென்னை, தென்சென்னை என்று 2 பிரிவாக பிரிந்து கிடக்கிறது. இதில் தென்சென்னை பகுதி மேம் பாலங்கள், அகலமான சாலைகள், தொழில் வளர்ச்சி, அரசின் முக்கிய அலுவலகங்கள் என ஒரு நகரத் துக்கான அனைத்து அம்சங்களை யும் கொண்டு வளர்ந்து நிற்கிறது. வடசென்னையோ, குறுகலான சாலைகள், போக்குவரத்து நெரிசல், பெரிய வாகனங்கள் செல்ல முடியாத சுரங்கப் பாதைகள், சாலைகளில் தேங்கும் கழிவு நீர் என மிகவும் பின்தங்கி இருக்கிறது. சென்னையில் கடந்த 20 ஆண்டுகளில் கட்டப்பட்ட பாலங்களில் 80 சதவீதம் தென் சென்னை மற்றும் மத்திய சென்னை பகுதியிலேயே கட்டப்பட்டுள்ளன.
தென் சென்னையையும், வட சென்னையையும் இணைக்கும் முக்கியமான இடம் வியாசர்பாடி கணேசபுரம் சுரங்கப்பாதை. பூந்தமல்லி நெடுஞ்சாலையி லிருந்து பெரம்பூர் பேரக்ஸ் சாலை வழியாக பெரம்பூர், கொளத்தூர், பெரியார் நகர், ரெட்டேரி சந்திப்புக்கு இந்த சுரங்கப்பாதை வழியாக வருவதுதான் எளிதானது. இல்லையெனில் பல கிலோ மீட்டர் தூரம் சுற்றிவர வேண்டும்.
இந்த சுரங்கப் பாதை 100 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டதால் மிகக் குறுகியதாக உள்ளது. இதனால் சிறிய லாரிகள் கூட இந்த வழியாக செல்ல முடியவில்லை. அரசு பேருந்துகளும் சிரமப்பட்டே இந்த சுரங்கப் பாதையை கடக்க வேண்டியுள்ளது. சிறிய அளவில் மழை பெய்தாலே இந்த சுரங்கப்பாதை நிரம்பி விடுவதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுகிறது. இதனால் இப்பகுதி மக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள்.
காலையிலும், மாலையிலும் இந்த சுரங்கப்பாதையை கடக்க நீண்டநேரம் காத்திருக்க வேண்டி யுள்ளது. இதனால் ஏற்படும் போக்கு வரத்து நெரிசல் புரசைவாக்கம் டவுட்டன் சந்திப்பு வரை எதிரொலிக்கிறது. கணேசபுரம் சுரங்கப் பாதைக்கு மாற்றாக மேம் பாலம் அமைக்கப்பட்டால் இந்தப் பிரச்சினைகள் அனைத்துக்கும் விடிவுகாலம் பிறக்கும் என்பது அப்பகுதி மக்களின் கருத்தாக உள்ளது. இதற்காக 50 ஆண்டுகளாக வட சென்னை மக்கள் கனவுடன் காத்திருக்கின்றனர்.
கடந்த 2009-ல் சட்டப்பேரவையில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த அன்றைய உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின், “ரூ. 67 கோடியே 70 லட்சத்தில் கணேசபுரம் மேம்பாலம் கட்டப்படும். இதற்கான நிலத்தை கையகப்படுத்தும் பணி தொடங்கி விட்டது. பூமிக்கு அடியில் உள்ள குழாய்கள் மாற்றி அமைக்கப்பட்டதும் பணிகள் தொடங்கும்” என்றார்.
ஆனால் 6 ஆண்டுகள் கடந்தும் பாலம் கட்டுவதற்கான பணிகள் தொடங்கப்படாமல் உள்ளன. இதுபற்றி மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, “பணம் ஒதுக்கப்பட்டு நிலம் கையகப்படுத்தும் பணி தொடங்கிய நிலையில் இந்த மேம்பாலத் திட்டம் கிடப்பில் உள்ளது. தமிழக அரசுதான் இது தொடர்பாக முடிவெடுக்க வேண்டும்” என்றனர்.
கணேசபுரம் மேம்பாலம் கட்டப்பட்டால் மட்டுமே தென் சென்னை - வட சென்னை இடையிலான வேறுபாடுகளைக் களைய முடியும். சமூக, பொருளாதார ரீதியாக வட சென்னை முன்னேற்றம் அடையும். எனவே மீண்டும் ஆட்சி அமைத்துள்ள அதிமுக அரசு அதற்கான முயற்சிகளை தொடங்க வேண்டும் என்கின்றனர் வட சென்னை மக்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT