Published : 14 Sep 2022 06:10 AM
Last Updated : 14 Sep 2022 06:10 AM

எதையும் சட்டரீதியாக எதிர்கொள்ள தயார்: முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் உறுதி

சென்னை: எதையும் சட்டரீதியாக எதிர்கொள்ள தயார் என்று முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

சென்னையில் தனது இல்லத்தில் நடந்த லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைக்கு பிறகு, முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: 3 அறை, 1 ஹால் என 2 ஆயிரம் சதுரஅடி கொண்ட எனது இல்லத்தில் 12 மணி நேரம் சோதனை நடத்தியிருக்கிறார்கள்.

எத்தனையோ மக்கள் பிரச்சினைகளை மறந்துவிட்டு, தனிப்பட்ட நபர் மீதான வெறுப்பால் அரசு இயந்திரத்தை திமுக அரசு தவறாக பயன் படுத்தியிருக்கிறது.

அரசியல் காழ்ப்புணர்ச்சியின் உச்சகட்ட பிரதிபலிப்பாக இதை பார்க்கிறேன். இக்கட்டான காலகட்டத்திலும் துணை நின்ற அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், டி.ஜெயக்குமார் மற்றும் நிர்வாகிகள், தொண்டர்களுக்கு நன்றி.

ஏற்கெனவே லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாரின் சோதனையை எதிர்கொண்டிருக்கிறேன். இப்போது மீண்டும் எதிர்கொள்கிறேன். இந்த சோதனையில் 120 ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது.

ஆனால் அதிகாரிகள் எழுத்துப்பூர்வமாக அளித்த கடிதம் என்னிடம் இருக்கிறது. எந்த ஆவணத்தையும் அவர்கள் கைப்பற்றவில்லை. எனது 2 செல்போன்களை மட்டும் எடுத்து சென்றிருக்கிறார்கள்.

என்னுடைய, எனது குடும்பத்தினரின் ஆதார் அட்டைகள், ஓட்டுநர் உரிமம், இன்சூரன்ஸ், எனது மகளின் பள்ளி ஆவணங்கள் போன்ற மிக முக்கியமான ஆவணங்களையும் கைப்பற்றி சென்றிருக்கிறார்கள். அரசியல் காழ்ப்புணர்ச்சியால் என் மீது இப்படி நடவடிக்கைகள் மேற்கொள்வது கவலையாக இருக்கிறது.

மத்திய அரசின் விதிமுறைகளைப் பின்பற்றிதான் தனியார் கல்லூரிக்கு தடையில்லா சான்றை முந்தைய ஆட்சியின்போது வழங்கினோம். தடையில்லா சான்றை தவிர மற்ற அனுமதியை தருவது மத்திய அரசுதான்.

ஒரே சமயத்தில் 11 மருத்துவக் கல்லூரிகளுக்கான அனுமதியை பெற்றுத் தந்தது முந்தைய அதிமுக அரசு தான். அதற்கு கூட வழக்குப் பதிவு செய்யட்டுமே. இது அரசியல் காழ்ப்புணர்ச்சியின் உச்சகட்டம் ஆகும்.

மக்கள் விரோத திமுகஆட்சியின் அவலங்களை திசைதிருப்ப, பழனிசாமிக்கு துணை நிற்கும் எங்களைப் போன்றவர்களை பழிவாங்குவது அரசியல் காழ்ப்புணர்ச்சியே. எல்லாவற்றையும் சட்டரீதியாக எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம் என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x