Published : 13 Sep 2022 06:38 PM
Last Updated : 13 Sep 2022 06:38 PM

“சில துறைகளில் அமைச்சர்களுக்கும் அதிகாரிகளுக்கும் ஒருங்கிணைப்பு இல்லை” - முதல்வர் ஸ்டாலின் அதிருப்தி

முதல்வர் ஸ்டாலின் | கோப்புப் படம்

சென்னை: "குறிப்பிட்ட சில அரசுத் துறைகளின் செயல்பாடுகள் பொது வெளியிலும், சமூக ஊடகங்களாலும் விமர்சனம் செய்யப்பட்டது. அரசு துறைகளின் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட வகையில் சிறப்பாக செயல்பட வேண்டும்" என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

சென்னை கலைவாணர் அரங்கில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அரசு துறைச் செயலாளர்கள் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில், முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசும்போது, பெயர் குறிப்பிடாமல் சில துறைகளின் மீது கடும் அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

அதுகுறித்து அவர் பேசும்போது, “சில திட்டங்களை அறிவிக்கிறோம். ஆனால், அதனை நடைமுறைப்படுத்துவதில் தேவையற்ற காலதாமதம் ஆகிறது. இத்தகைய காலதாமதம் தவிர்க்கப்பட்ட வேண்டும். சிந்தித்து முடிவெடுக்க வேண்டும் என்பது உண்மைதான். அதற்காக சிந்தித்துக் கொண்டே இருந்து விடக் கூடாது.

நிதி நெருக்கடியில் நாம் இருக்கிறோம் என்பது உண்மைதான். எனவே, எந்த திட்டங்களுக்கு அதிக முக்கியத்துவமும், முன்னுரிமையும் தர வேண்டுமோ அந்தத் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடுகளை விரைந்து வழங்கி அவற்றை செயலாக்கத்திற்கு கொண்டு வரவேண்டும்.

எத்தனையோ திட்டங்களைத் தீட்டினாலும், முதல்வரால் மற்றும் அமைச்சர்களால் அறிவிக்கப்படும் திட்டங்கள் அதிகமான கவனத்தைப் பெறும். அது இயற்கைதான். அப்படி கவனம் பெறும் திட்டங்களை உரிய காலத்தில் செயல்படுத்தி முடித்தாக வேண்டும்.

குறிப்பிட்ட சில அரசுத் துறைகளின் செயல்பாடுகள் பொது வெளியிலும், சமூக ஊடகங்களாலும் விமர்சனம் செய்யப்பட்டது. இவற்றில் துறைச் செயலாளர்கள் இதுபோன்ற இனங்களில் மிகுந்த கவனத்துடனும் எச்சரிக்கையுடனும் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட வகையில் சிறப்பாக செயல்பட வேண்டும்.

துறை ரீதியாக நான் உங்களோடு நேரடி தொடர்பில் இருக்கிறேன். அமைச்சர்கள் இருக்கிறார்கள். முதல்வர் அலுவலகமும் உங்களோடு தொடர்பில் இருக்கிறது. சிறந்த ஒருங்கிணைப்பு இருக்கிறது. இதே போன்ற ஒருங்கிணைந்த செயல்பாடு உங்களுக்கும், உங்களுக்கு கீழேயுள்ள அதிகாரிகளுக்கும் இருக்கிறதா என்றால் ஒருசில துறைகளில் இல்லை.

அமைச்சர்களுக்கும் துறை அதிகாரிகளுக்குமான ஒருங்கிணைந்த செயல்பாடு கூட சில துறைகளில், சில நேரங்களில் ஏற்படாமல் இருப்பதாகவும் நான் அறிகிறேன். இது எங்கும், எப்போதும், எந்தத் துறையிலும் எந்த சூழலிலும் ஏற்படக் கூடாது எனக் கேட்டுக் கொள்கிறேன். மக்களுக்கும், ஆட்சி நிர்வாகத்துக்குமான தொடர்பும், அவர்களது அனுபவங்களும், அனைவராலும் மதிக்க வேண்டியது என்பதை நீங்கள் மறுக்க மாட்டீர்கள் என நினைக்கிறேன்.

அதேபோல் மாவட்ட நிர்வாகத்துக்கும், துறைச் செயலாளர்களுக்குமான ஒருங்கிணைப்பும், ஒருங்கிணைந்த செயல்பாடும் நிச்சயம் அவசியம் ஆகும். ஆட்சியில் இருப்பவர் இடும் கட்டளையைச் செயல்படுத்துபவர்களாக மட்டுமல்லாமல், மக்கள் நலன் கருதி நீங்கள் வைத்துள்ள, உங்களது கனவுத் திட்டங்களையும், அரசுக்குச் சொல்லி, அதனையும் செயல்படுத்த நீங்கள் முனைய வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.

அமைச்சர்கள், துறைச் செயலாளர்கள், துறைத் தலைவர்கள், மாவட்ட நிர்வாகம் ஆகிய நான்கும் ஒரே நேர்கோட்டில் செயல்பட்டால், நேர்கோட்டில் சென்றால், தமிழ்நாட்டின் அனைத்துத் துறைகளும் நம்பர் ஒன் என்ற இலக்கை நிச்சயமாக அடையமுடியும்” என்றார்.

மேலும், சட்டப்பேரவையில் வெளியிட்ட அனைத்து அறிவிப்புகளுக்கான ஆணைகளும் அக்டோபர் 15-க்குள் வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அவ்வாறு செயல்படுத்தப்பட வேண்டிய அறிவிப்புகளின் எண்ணிக்கை மட்டும் 750-க்கும் மேல் இருக்கும். அதன் விவரம்: அனைத்து அறிவிப்புகளும் அக்.15-க்குள் செயல்பாட்டுக்கு வரவேண்டும்: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x