Published : 13 Sep 2022 06:19 PM
Last Updated : 13 Sep 2022 06:19 PM

மாணவியரிடம் அத்துமீறல்: தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி உதவிப் பேராசிரியர் பணியிடை நீக்கம்

தருமபுரி: தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரியில் மாணவியரிடம் அத்துமீறி நடந்துகொண்ட உதவிப் பேராசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரியில் சட்டம் சார்ந்த மருத்துவப் பிரிவின் உதவிப் பேராசிரியராக பணியாற்றியவர் மருத்துவர் சதீஷ்குமார். இவர் மீது, மருத்துவக் கல்லூரி இரண்டாம் ஆண்டு மாணவியர் சார்பில் அண்மையில் கல்லூரி முதல்வரிடம் புகார் மனு ஒன்று அளிக்கப்பட்டது. அந்த மனுவில், 'உதவிப் பேராசிரியர் சதீஷ்குமார் வகுப்பறையில் மாணவியரிடம் அத்துமீறும் வகையில் நடந்து கொள்கிறார். இவரது நடவடிக்கைகள் மற்றும் அணுகுமுறைகளால் இயல்பாக படிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. மாணவியருக்கு பாதுகாப்பான சூழலை ஏற்படுத்தித் தர வேண்டும்' என்று கூறப்பட்டிருந்தது.

இந்த புகாரின்பேரில் விசாரணை நடத்த கண்மணி கார்த்திகேயன், தண்டர் சீப், காந்தி ஆகிய 3 மருத்துவர்கள் அடங்கிய விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவினரின் விசாரணையில், மாணவியரிடம் மருத்துவர் சதீஷ்குமார் அத்துமீறலில் ஈடுபட்டது உறுதியானது. எனவே, முதற்கட்டமாக மருத்துவர் சதீஷ்குமாரை வேறு துறைக்கு மாற்றம் செய்தனர். விசாரணை அறிக்கை சென்னையில் உள்ள மருத்துவக் கல்வி இயக்ககத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தற்போது அவர் பணியிடை நீக்கம் செயய்ப்பட்டுள்ளார்.

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று (13-ம் தேதி) தருமபுரி வந்தார். அவரிடம் இதுதொடர்பாக கேள்வியெழுப்பியபோது, ''புகாருக்கு உள்ளான மருத்துவர் சதீஷ்குமார், மாணவியரிடம் அத்துமீறலில் ஈடுபட்டது விசாரணையில் உறுதியானதும், உடனடியாக அவரை வேறு துறைக்கு மாறுதல் செய்யப்பட்டது. தற்போது அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். துறை ரீதியான நடவடிக்கையும் அவர் மீது எடுக்கப்பட உள்ளது. மருத்துவப் பணி மக்களை காக்கும் மகத்தான பணி. இதில் இருந்துகொண்டு அத்துமீறி நடந்தால் அவர்கள் மீது பாரபட்சமற்ற நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x