அதிமுக அலுவலக சூறை வழக்கில் சிசிடிவி ஆதாரங்கள்: உயர் நீதிமன்றத்தில் சிபிசிஐடி தகவல்

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை: அதிமுக அலுவலகம் சூறையாடப்பட்ட வழக்கில் கண்காணிப்பு கேமரா பதிவுகள் உள்ளிட்ட ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாக சிபிசிஐடி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூலை 11-ம் தேதி அதிமுக தலைமை அலுவலகம் சூறையாடப்பட்டதாக கூறி அளித்த புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை சிபிஐ அல்லது வேறு விசாரணை அமைப்புகளுக்கு மாற்ற கோரி முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, இந்தச் சம்பவம் தொடர்பான மூன்று வழக்குகளையும் சிபிசிஐடிக்கு மாற்றி இருப்பதாக டிஜிபி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, வழக்கின் விசாரணை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய சிபிசிஐடிக்கு உத்தரவிட்டு, விசாரணை செப்டம்பர் 19-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், வழக்கின் விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை எனக் கூறி, விசாரணை துரிதப்படுத்த சிபிசிஐடிக்கு தகுந்த உத்தரவுகளை பிறப்பிக்க டிஜிபிக்கு உத்தரவிடக் கோரி அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கூடுதல் மனுவை தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நீதிபதி இளந்திரையன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது காவல் துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "கடந்த 7-ம் தேதி அதிமுக அலுவலகத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. கண்காணிப்பு கேமரா பதிவுகள் உள்ளிட்ட ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. விசாரணை நிலை குறித்து செப்டம்பர் 19-ம் தேதி அறிக்கை தாக்கல் செய்யப்படும்" என்று தெரிவித்தார்.

இதையடுத்து, வழக்கின் விசாரணையை விரைவாக முடிக்க அறிவுறுத்திய நீதிபதி, விசாரணை நிலை குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை 19-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in