

சென்னை: சனாதனவாதிகளால் அடக்கப்பட்டு, முறையான ஆடை அணியும் உரிமை கூட மறுக்கப்பட்டிருந்த வரலாற்றை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் ஏன் சொல்ல மறுக்கிறார் என்று அமைச்சர் மனோ தங்கராஜ் கேள்வி எழுப்பி உள்ளார்.
ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனை சுட்டிக் காட்டி முரசொலி நாளிதழில் வெளியான கட்டுரையில், "மத்திய அரசின் அரசியல் நியமனமாக விளங்கும் ஒற்றை நபர், வளர்ச்சித் திட்டங்கள், மக்கள் நலச் சட்டங்களை தடுத்து நிறுத்தி காலதாமதப்படுத்தி, அதிலே அரசியல் செய்வதை எந்த அரசு தான் ஏற்கும். இரண்டு அதிகார மையங்களின் மோதலில் மக்கள் துன்பப்படக் கூடாதே என்ற நல்லெண்ணத்தில் மாநில அரசு விட்டுக் கொடுத்துப் போக நினைக்கலாம். இந்த மோதல் போக்கு நீடித்தால், ஆளுநர் தமிழசைக்கு ஏற்பட்ட நிலை ஏற்படலாம்" என்று அந்த கட்டுரையில் கூறப்பட்டு இருந்தது.
இதற்கு பதில் அளித்த ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், "நான் அப்பராணியும் இல்லை, அப்பாவியும் இல்லை. புலியை முறத்தால் விரட்டிய தமிழச்சியின் பரம்பரையில் வந்தவள். நான் வாய்விட்டு அழுவதும் தலைகுனிவதும் என்னுடைய சரித்திரத்திலேயே இல்லை" என்று பதில் அளித்திருந்தார்.
இந்நிலையில் தமிழிசை சவுந்தரராஜனுக்கு தனது ட்டுவிட்டர் பக்கத்தில் பதில் அளித்துள்ள தகவல் தொழில்நுட்பதுறை அமைச்சர் மனோ தங்கராஜ், "புலியை முறத்தால் விரட்டிய தமிழச்சியின் பரம்பரையில் வந்தவள் நான்" என்று கூறும் தமிழிசை, சனாதனவாதிகளால் அடக்கப்பட்டு, முறையான ஆடை அணியும் உரிமை கூட மறுக்கப்பட்டிருந்த வரலாற்றை ஏன் சொல்ல மறுக்கிறார்? 2022 தோள்சீலை போராட்டம் ஆரம்பித்து 200-வது ஆண்டு" என்று தெரிவித்துள்ளார்.