Published : 13 Sep 2022 07:18 AM
Last Updated : 13 Sep 2022 07:18 AM

கலை, அறிவியல் கல்லூரிகளின் பாடத்திட்டம் விரைவில் மாற்றம் - ‘நான் முதல்வன்’ திட்ட மண்டல மாநாட்டில் அமைச்சர் பொன்முடி தகவல்

’நான் முதல்வன்’ திட்ட மண்டல மாநாட்டில் அமைச்சர் பொன்முடி பேசினார். உடன், அமைச்சர் சி.வி.கணேசன், சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை செயலர் உதயச்சந்திரன், உயர்கல்வித் துறை செயலர் கார்த்திகேயன், தொழில்நுட்பக் கல்வி ஆணையர் லட்சுமிபிரியா, திறன் மேம்பாட்டுக் கழக மேலாண்மை இயக்குநர் இன்னசென்ட் திவ்யா, அண்ணா பல்கலை. துணைவேந்தர் க.வேல்ராஜ் உள்ளிட்டோர். படம்: பு.க.பிரவீன்

சென்னை: பொறியியல் பாடத்திட்டங்களை தொடர்ந்து தமிழகத்தில் கலை, அறிவியல் கல்லூரிகளின் பாடத்திட்டங்களும் விரைவில் மாற்றப்பட உள்ளதாக அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.

‘நான் முதல்வன்’ திட்டத்தின் மண்டல மாநாடு சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழக விவேகானந்தர் அரங்கில் நேற்று நடந்தது. இதில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களை சேர்ந்த 68 பொறியியல் கல்லூரிகளின் முதல்வர்கள், ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் பணியாற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

மாநாட்டை உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, தொழிலாளர் நலத் துறை அமைச்சர் சி.வி.கணேசன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். பின்னர் அவர்கள் பேசியதாவது:

அமைச்சர் பொன்முடி: பொறியியல் கல்லூரிகளில் பாடத் திட்டம் மாற்றப்பட்டுள்ளது. பொறியியல் படிப்பவர்கள் உங்கள் பகுதியில் தேவைப்படும் தொழில்களை நீங்களே செய்ய வேண்டும் என்பதற்காக பல்வேறு பாடங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

நுழைவுத் தேர்வை 2007-ல் ரத்து செய்து சட்டம் போட்டதால்தான், அதிக அளவிலான கிராமப்புற மாணவர்கள் பொறியியல் படிக்க வாய்ப்பு கிடைத்தது. தற்போது அனைத்து படிப்புகளுக்கும் நுழைவுத் தேர்வை நுழைக்கப் பார்க்கின்றனர். 3,5,8-ம் வகுப்புகளிலும் பொதுத் தேர்வை உருவாக்க நினைக்கின்றனர். அதற்காகவே தமிழகத்துக்கு என புதிய கல்விக் கொள்கையை உருவாக்க முதல்வர் முயற்சி எடுத்து வருகின்றார். கலை, அறிவியல் கல்லூரிகளிலும் விரைவில் புதிய பாடத்திட்டம் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

அமைச்சர் சி.வி.கணேசன்: பல நாடுகளின் முதலீட்டாளர்களும் தமிழகம் நோக்கி வருகின்றனர். அந்த நிறுவனங்கள் தொழில் தொடங்கும்போது, திறன்பெற்ற பணியாளர்கள் அவர்களுக்கு வேண்டும். அதற்கேற்ப, மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும். கிராமப்புற மாணவர்கள், விடுதி மாணவர்களுக்கு ஆங்கிலமொழித்திறன் கற்று தரப்படுகிறது.

சிறப்பு திட்ட செயலாக்கத் துறை செயலர் டி. உதயச்சந்திரன்: அடுத்த கல்வி ஆண்டில் பாலிடெக்னிக், ஐடிஐ பாடத்திட்டங்களில் மாற்றங்கள் செய்யப்பட உள்ளன.இலவச ஆன்லைன் படிப்புகளைபடிக்கவும் மாணவர்களை ஊக்கப்படுத்த வேண்டும். வங்கி, நிதிதொடர்பான படிப்புகளும் அறிமுகப்படுத்தப்படுகிறது.

இவ்வாறு அவர்கள் பேசினர். நிகழ்ச்சியில், உயர்கல்வித் துறை செயலர் தா.கார்த்திகேயன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x