Published : 13 Sep 2022 06:20 AM
Last Updated : 13 Sep 2022 06:20 AM

சீருடையுடன் மது அருந்தும் மாணவர்கள்: உயர் நீதிமன்ற நீதிபதிகள் வேதனை

மதுரை: பள்ளிச் சீருடையுடன் மாணவர்கள் மது அருந்துவது அதிர்ச்சி அளிக்கிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று உயர் நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.

திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல்செய்த மனுவில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் அரசே மதுபான விற்பனையில் ஈடுபட்டுள்ளது. பண்டிகைக் காலங்களில் இலக்குநிர்ணயித்து, மது விற்கப்படுகிறது. மது அருந்துவோர் எண்ணிக்கையில் தமிழகம்தான் முதலிடம் வகிக்கிறது.

தற்போது டாஸ்மாக் கடைகள் பகல் 12 மணி முதல் இரவு 10 வரை திறந்திருக்கின்றன. இரவு நேரங்களில் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவோரால் விபத்துகளும், உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன. எனவே, தமிழகத்தில் 21 வயதுக்குக் கீழ்உள்ளவர்களுக்கு மது விற்க தடை விதிக்க வேண்டும். மதுவால் ஏற்படும் தீமைகள் குறித்தும், விலைப்பட்டியல், கூடுதல் விற்பனைக்கு மது விற்பனை செய்தால் புகார் அளிக்க வேண்டிய அதிகாரிகளின் தொடர்பு எண்கள் ஆகியவற்றைக் குறிப்பிட்டு தகவல் பலகை வைக்க வேண்டும்.

மேலும், மது பாட்டில்களில், அந்த மதுவில் கலந்துள்ள பொருட்கள் மற்றும் மதுபானத் தயாரிப்பாளர் தொடர்பான விவரங்களைத் தமிழில் குறிப்பிடவும், டாஸ்மாக்விற்பனை நேரத்தை பிற்பகல் 2 முதல் 8 மணி வரை மாற்றியமைக்கவும் தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்திய நாராயண பிரசாத் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், பள்ளி மாணவர்கள் சீருடையுடன் மது அருந்தும் புகைப்படங்கள் நீதிபதியிடம் வழங்கப்பட்டன.

விற்பனைக்கு தடை?

இதையடுத்து நீதிபதிகள், ‘‘இந்த வழக்கைத் தொடர்ந்த மனுதாரரை நீதிமன்றம் பாராட்டுகிறது. பள்ளிச் சீருடையுடன் மாணவர்கள் மது அருந்தும் புகைப்படம் அதிர்ச்சியைத் தருகிறது. நாடு எங்கு சென்று கொண்டிருக்கிறது என்றே தெரியவில்லை? இதற்கு உரிய தீர்வு காணப்பட வேண்டும். இல்லையேல் மது விற்பனைக்குத் தடை விதிக்க நேரிடும்’’ என்றனர். மேலும், இந்த மனு தொடர்பான விவரங்களைச் சேகரித்து, அரசுத் தரப்பில் பதில் அளிக்க உத்தரவிட்டு, விசாரணையை 2 வாரங்களுக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x