Published : 13 Sep 2022 06:55 AM
Last Updated : 13 Sep 2022 06:55 AM

என்னை அவமதிப்பதை எண்ணி மகிழ்வோர் சரியான மனநிலை இல்லாதவர்கள்: தமிழிசை சவுந்தரராஜன் குற்றச்சாட்டு

திருச்சி: சரியான மனநிலை இல்லாதவர்களே, நான் அவமதிக்கப்பட்டதை எண்ணி மகிழ்கின்றனர் என்று தெலங்கானா மற்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

திருச்சி விமானநிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: இரு மாநிலங்களின் ஆளுநராக எனது பணியை சிறந்த முறையில், உண்மையாக மேற்கொண்டு வருகிறேன்.

வருங்காலத்தில் எந்த மாதிரியான பணியை எனக்குத் தருவார்கள் என்பது, ஆண்டவனுக்கும், மேலேஆட்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கும் மட்டுமே தெரியும். தெலங்கானாவில் நான் அவமதிக்கப்பட்டதாகக் கூறியதை, இங்கு சிலர் மகிழ்ச்சியாகக் கருதுகின்றனர்.

புலியை முறத்தால் அடித்துவிரட்டிய தமிழச்சி பரம்பரையில்பிறந்தவள் நான். எந்த அவமானத்துக்கும் அஞ்சமாட்டேன். சரியான மனநிலையில் இல்லா தவர்களே, நான் அவமதிக்கப் பட்டதை எண்ணி மகிழ்கின்றனர்.

வீட்டுக்கும், நாட்டுக்கும் புதிதாக வரக்கூடியவர்களுக்கு வரவேற்பு அளிக்க வேண்டியது இந்தியாவின் கலாச்சாரம். ஆனால், அந்தக் கலாச்சாரத்தை தெலங்கானாவில் பின்பற்றவில்லை என்பதை மக்களுக்குத் தெரியப்படுத்தவே அதுகுறித்து கூறினேன்.

அந்த மாநிலத்தில் 6 மாவட்டங்களைத் தத்தெடுத்திருப்பது மட்டுமின்றி,பழங்குடியின மக்களுக்கு ஊட்டச்சத்தை அதிகரிக்கும் நோக்கில் முட்டைக்காக கோழி வளர்ப்பை ஊக்கப்படுத்துவது போன்ற பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளேன். அப்படியிருந்தும், ஆளுநரான என்னை அவமதிக்கின்றனர். மதித்தாலும், மதிக்காவிட்டாலும் எனது பணியை தொடர்வேன்.

நாட்டில் நடைபெறும் அனைத்து தேர்வுகளையும் எதிர்கொள்ளும் வகையில் மாணவர்களை உருவாக்கவே புதிய கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது. இதில் குறைபாடுகள் இருந்தால், அதை அரசிடம் சுட்டிக் காட்டலாம்.

ஆனால், தமிழகத்தில் புதியகல்விக் கொள்கையை ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்று சொல்வது சரியானதாக இருக்காது. இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x