

சென்னை: தமிழ்நாடு சாரண, சாரணியர் இயக்குநரகத்தின் புதிய தலைவர் நியமனத் தேர்தல் செப்டம்பர் 10-ம்தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் போட்டியிட பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியைத் தவிர வேறு யாரும் விண்ணப்பிக்கவில்லை.
இதையடுத்து, தமிழ்நாடு சாரண, சாரணியர் இயக்குநரகத்தின் தலைவராக அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டார். அதேபோல, மாநில முதன்மை ஆணையராக, பள்ளிக் கல்வி ஆணையர் க.நந்தகுமாரும் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டார். மேலும், பாடநூல் கழகச் செயலர் ச.கண்ணப்பன் உட்பட 12 பேர் துணைத் தலைவர்களாக தேர்வாகினர்.
புதிய நிர்வாகிகள் பதவியேற்புவிழா சென்னையில் நேற்று நடைபெற்றது. பதவி ஏற்புக்குப் பின்னர் அமைச்சர் அன்பில் மகேஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
10 லட்சம் இலக்கு
சாரணர் இயக்கத்தில் தற்போது 4 லட்சத்துக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர். இதை 10 லட்சமாக உயர்த்த இலக்கு நிர்ணயித்துள்ளோம். சாரணர் இயக்க மாணவர்களுக்கு, மாவட்ட, மாநில,தேசிய அளவில் முகாம்கள் நடத்தத் திட்டமிட்டு உள்ளோம்.
ஒவ்வொரு மாவட்டத்துக்கும் நான் ஆய்வுக்குச் செல்லும்போது, சாரணர் இயக்கம் குறித்தும் பள்ளிகளில் ஆய்வு மேற்கொள்வேன். சாரணர் இயக்கத்துக்கு முதல்கட்டமாக ரூ.25 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
நீட் தேர்விலிருந்து விலக்கு பெறுவதற்கு சட்டப் போராட்டம் நடைபெற்று வருகிறது. அதில் வெற்றி பெறும்வரை, நீட் தேர்வுக்கு பயிற்சி அளிக்கப்படும். அரசுப் பள்ளி மாணவர்கள் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நீட் தேர்வில் தகுதி பெற்றுள்ளனர். எனினும், இது போதாது. இதை அதிகப்படுத்த அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும்.
ஐஐடி, ஐஐஎம் போன்ற உயர் கல்வி நிறுவனங்களில் தமிழக மாணவர்கள் அதிக அளவில் சேர வேண்டும் என்பதற்காகத்தான் மாதிரிப் பள்ளிகளைக் கொண்டு வருகிறோம். இவ்வாறு அமைச்சர் கூறினார்.
விழாவில், சாரண, சாரணிய ஆசிரியர்கள் 268 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டன. பள்ளிக் கல்வித் துறை இணை இயக்குனர் நரேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.