ஓட்டுநர் உரிம தேர்வை புறக்கணித்து பயிற்சி பள்ளிகள் வேலைநிறுத்தம்: உத்தரவை திரும்பப் பெற வலியுறுத்தல்

ஓட்டுநர் உரிம தேர்வை புறக்கணித்து பயிற்சி பள்ளிகள் வேலைநிறுத்தம்: உத்தரவை திரும்பப் பெற வலியுறுத்தல்
Updated on
1 min read

சென்னை: வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் ஓட்டுநர், பழகுநர் உரிமம் பெறுவதற்கான தேர்வுக்கு கட்டுப்பாடு விதிப்பதை கண்டித்து பயிற்சிப் பள்ளி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம் தொடங்கினர்.

‘ஓட்டுநர் பயிற்சிப் பள்ளிகளில் பயில்வோரை வாரத்தில் செவ்வாய், புதன் ஆகிய 2 நாட்கள் மட்டும்தேர்வுக்கு அனுமதிக்க வேண்டும். மற்ற நாட்களில் இதர விண்ணப்பதாரர்களுக்கு ஓட்டுநர் தேர்வு நடத்த வேண்டும்’ என்று போக்குவரத்து துறைஆணையர் சமீபத்தில் உத்தரவிட்டிருந்தார்.

இந்த உத்தரவை திரும்ப பெற வலியுறுத்தி, தமிழ்நாடு ஓட்டுநர் பயிற்சிப் பள்ளி உரிமையாளர்கள் கூட்டமைப்பினர் நேற்று முதல் வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் (ஆர்டிஓ) நடைபெறும் ஓட்டுநர், பழகுநர் தேர்வை புறக்கணித்துள்ளனர்.

இதுகுறித்து கூட்டமைப்பின் தலைவர் ஆர்.முரளிதரன், செயலர் வைகை ஆர்.குமார் ஆகியோர் கூறியதாவது:

பொதுமக்களுக்கு வாரத்தில் 3 நாட்களும், ஓட்டுநர் பயிற்சிப் பள்ளியில் பயில்வோருக்கு 2 நாட்களும் ஓட்டுநர் தேர்வு நடத்த வேண்டும் என்று போக்குவரத்து துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார். எங்களிடம் பயிற்சி பெறுவோரும் பொதுமக்கள்தானே, பிறகு ஏன் இந்த பாகுபாடு என தெரியவில்லை.

இந்த உத்தரவை திரும்ப பெற வலியுறுத்தி, ஓட்டுநர், பழகுநர் உரிமத் தேர்வுகளை மட்டும் புறக்கணித்துள்ளோம். தமிழகம் முழுவதும் உள்ள2,500-க்கும் மேற்பட்ட ஓட்டுநர் பயிற்சி பள்ளிகளில் 99 சதவீத பள்ளிகள் உரிமம் பெறுவதற்கான தேர்வுக்கு விண்ணப்பதாரர்களை அழைத்துச் செல்லவில்லை.

இதுகுறித்து பொதுமக்களுக்கும் விளக்கியுள்ளோம். அவர்களும் எங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கியுள்ளனர். உத்தரவை திரும்ப பெறும் வரை வேலைநிறுத்தம் தொடரும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in