Published : 13 Sep 2022 07:26 AM
Last Updated : 13 Sep 2022 07:26 AM

முகச்சீரமைப்பு பிளாஸ்டிக் சர்ஜரி சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் ஆவடி சிறுமி டானியா

முகச்சீரமைப்பு அறுவை சிகிச்சை முடிந்து வீடு திரும்பும் சிறுமி டானியாவை அமைச்சர் சா.மு.நாசர், பூங்கொத்து கொடுத்து வழியனுப்பி வைத்தார். உடன், மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் உள்ளிட்டோர்.

திருவள்ளூர்: அரிய வகை முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு முகச் சீரமைப்பு அறுவை சிகிச்சை செய்யப்பட்ட ஆவடி சிறுமி டானியா பூரண குணமடைந்து, மருத்துவமனையிலிருந்து நேற்று வீடு திரும்பினார். சிகிச்சைக்கு நடவடிக்கை எடுத்ததற்காக முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி கூறுவதாக நெகிழ்ச்சியுடன் சிறுமி தெரிவித்தார்.

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி வீராபுரம் பகுதியைச் சேர்ந்த ஸ்டீபன்ராஜ்- சவுபாக்யா தம்பதியின் மகள் டானியா (9). அங்குள்ள அரசு பள்ளியில் 4-ம் வகுப்பு படிக்கிறார். கடந்த ஆறு ஆண்டுகளாக இவருக்கு அரிய வகை முகச்சிதைவு நோய் பாதித்து அவதியுற்று வந்தார்.

இதனால், டானியா படிக்கும் பள்ளியில் சக மாணவர்களும் ஆசிரியர்களும் அவரின் குறைபாடுகளை காரணம் காட்டி வெறுத்து ஒதுக்கி தனிமைப்படுத்தி வந்தாக கூறப்படுகிறது.

இந்த பாதிப்பை சரிசெய்ய சிறுமி டானியாவின் பெற்றோர் பல இடங்களில் மருத்துவம் பார்த்து ரூ.10 லட்சத்துக்கு மேல் செலவு செய்தும் சரியாகவில்லை. மேலும் முகச்சீரமைப்பு அறுவை சிசிச்சைக்கு பண வசதியின்றி தவித்தனர்.

இதுகுறித்து, தகவலறிந்த திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் மற்றும் மருத்துவக் குழுவினர் கடந்த மாதம் 17-ம் தேதி சிறுமியின் வீட்டுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

முதல்வர் ஸ்டாலின் உத்தரவின்பேரில், முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம் மூலம் முகச்சீரமைப்பு அறுவை சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

இதற்காக பெரும்புதூர் அருகே உள்ள தண்டலம் தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிளாஸ்டிக் சர்ஜரி அறுவை சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

அங்கு, மேற்கொள்ளப்பட்ட பல்வேறு பரிசோதனைகளுக்குப் பிறகு, கடந்த மாதம் 23-ம் தேதி 10 மருத்துவ நிபுணர்களைக் கொண்ட குழுவினர் டானியாவுக்கு முகச்சீரமைப்பு அறுவை சிகிச்சை செய்தனர். சுமார் 9 மணி நேரம் நடைபெற்ற அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது.

இதையடுத்து, கடந்த மாதம் 29-ம் தேதி இரவு, முதல்வர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனைக்கு சென்று, சிறுமி டானியாவை சந்தித்து நலம் விசாரித்தார்.

பின்னர் 18 நாட்களுக்கும் மேலாக தொடர் கண்காணிப்பில் இருந்து வந்த டானியா குணமடைந்ததையடுத்து, அவரை மருத்துவமனையிலிருந்து வீட்டுக்கு அனுப்ப மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வந்தது. அதன்படி, நேற்று சிறுமி டானியா வீடு திரும்பினார்.

அவ்வாறு வீடு திரும்பிய டானியா, முதல்வருக்கு நன்றி தெரிவிப்பதாகவும் தன் முகம் சரியானது மகிழ்ச்சியை அளிப்பதாகவும் இனி நானும் பள்ளிக்குச் செல்வேன் எனவும் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

முன்னதாக, பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர், மருத்துவமனைக்குச் சென்று, டானியாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவ குழுவினரை பாராட்டியதோடு, அக்குழுவினருடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டார். தொடர்ந்து, சிறுமிக்கு பூங்கொத்து அளித்து, அவரை பெற்றோருடன் வீட்டுக்கு வழியனுப்பி வைத்தார்.

அப்போது செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது: தமிழக முதல்வர் எடுத்த சீரிய முயற்சியால், சிறுமி டானியாவின் முகத்தை சீரமைப்பதில் மருத்துவ குழுவினர் வெற்றி கண்டு இருக்கிறார்கள்.

இன்னும் ஓரிரு மாதங்களில் டானியாவின் முகம் பழைய நிலைக்கு திரும்பும். டானியாவின் பெற்றோருக்கு வீடு ஒதுக்கித் தருவதற்கான ஏற்பாடுகளை மாவட்ட ஆட்சியர் மேற்கொண்டு வருகிறார். டானியாவின் கல்விச் செலவை அரசே ஏற்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்நிகழ்வின்போது, மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகளுக்கான இணை இயக்குநர் இளங்கோவன், மாதவரம் எம்எல்ஏ சுதர்சனம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x