

சென்னை: மழைநீர் வடிகால்வாய் பகுதியில் சிக்கிக் கொண்ட பசுவை சுமார் 2 மணி நேரம் போராடி தீயணைப்பு படை வீரர்கள் பத்திரமாக மீட்டனர்.
சென்னை கொளத்தூர், குமரன் நகர் அருகே மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. நீர் செல்ல பெரிய அளவில் கான்கிரீட் வழித்தடம் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று அதிகாலை இந்த கான்கிரீட் மற்றும் மண் சுவர் இடைவெளி இடையே அவ்வழியாக சென்ற பசு மாடு ஒன்று விழுந்து நடுவில் மாட்டி கொண்டது.
ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போராடியும் அந்த பசுவால் வெளியே வரமுடியவில்லை. அதன் அலறல் சத்தம் கேட்டு அந்த வழியாக நடைபயிற்சி சென்று கொண்டிருந்த இன்பநாதன் என்ற உயர் நீதிமன்ற வழக்கறிஞர் இது தொடர்பாக காலை 6.30 மணியளவில் தீயணைப்பு படை வீரர்களுக்கு தகவல் கொடுத்தார்.
இதையடுத்து, செம்பியம் பகுதியில் இருந்து விரைந்து சென்ற தீயணைப்பு படை வீரர்கள் கயிறு கட்டி மாட்டை மீட்க முயன்றனர். ஆனால், முடியவில்லை. இதையடுத்து கிரேன் வரவழைக்கப்பட்டு அதன் உதவியுடன் சுமார் 2 மணி நேரம் போராடி மழை நீர் வடிகால்வாய் பகுதியில் சிக்கிக் கொண்டிருந்த பசு பத்திரமாக மீட்கப்பட்டது.