Published : 13 Sep 2022 07:04 AM
Last Updated : 13 Sep 2022 07:04 AM
சென்னை: தொழிற்சாலைகளில் விபத்துகளைத் தடுக்க நிரந்தர தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் அனைத்து பாதுகாப்பு வசதிகள் மற்றும் பயிற்சிகளை தற்காலிக தொழிலாளர்களுக்கும் வழங்க வேண்டியது அவசியம் என்று பணியிட பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தொழிலாளர் துறை அமைச்சர் சி.வி.கணேசன் அறிவுறுத்தியுள்ளார்.
தொழிற்சாலைகள் மற்றும் கட்டுமான பணிகளில் தொழிலாளர்களின் பணியிட பாதுகாப்பு குறித்து நிர்வாக பிரதிநிதிகளுடனான விழிப்புணர்வு நிகழ்ச்சிதொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககத்தால் நடத்தப்பட்டது.
நிகழ்ச்சிக்கு தலைமையேற்ற, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் பேசியதாவது:
தமிழக முதல்வர் தமிழகத்தில் தொழில்முனைவோரை ஈர்க்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இதன் காரணமாக பல வெளிநாட்டு நிறுவனங்கள் தங்களது உற்பத்தி அலகுகளை தமிழகத்தில் நிறுவ முன்வந்துள்ளனர். இதன் விளைவாக,பல வேலையில்லா இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
தொழிற்சாலைகளில் தற்காலிக தொழிலாளர்களுக்கு போதிய அனுபவம் மற்றும் பயிற்சி இல்லாததன் விளைவாக பெரும்பாலான விபத்துகள் ஏற்படுகின்றன. விபத்துகளைத் தடுப்பதற்கான முக்கியமுயற்சியாக நிரந்தர தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் அனைத்து பாதுகாப்பு வசதிகள், பயிற்சிகள் ஆகியவற்றை தற்காலிக தொழிலாளர்களுக்கும் அமைத்துத் தர வேண்டியது அவசியம்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் தொழிலாளர் நலத்துறை செயலர் முகமது நசிமுதீன் பேசிம்போது, “அதிக அளவிலான தொழிற்சாலைகள் அமைந்துள்ள மாநிலங்களில் தமிழகம் 3-வது இடத்தில் உள்ளது. தமிழகத்தை தொழிலாளர்கள் பாதுகாப்பாக பணிபுரியும் இடமாகஅமைக்க, அரசு எல்லா முயற்சிகளையும் எடுத்து வருகிறது” என்றார்.
தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குநர் எம்.வி.செந்தில்குமார் பணியிடங்களில் விபத்துகளைக் குறைக்க அரசால் எடுக்கப்படும் நடவடிக்கைகள், பாதுகாப்பான பணியிடத்தைஉருவாக்குவதில் வேலையளிப்பவரின் பொறுப்புகள் குறித்து எடுத்துரைத்தார்.
பல்வேறு தொழிற்சாலைகள் மற்றும் கட்டுமான நிறுவனங்களின் நிர்வாகத் தரப்பின் கூட்டமைப்புகளைச் சேர்ந்தவர்கள், அரசு, பொதுத் துறை நிறுவனங்களின் பிரதிநிதிகள் என 105 பேர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பணியிட பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்து தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார கூடுதல் இயக்குநர் செ.ஆனந்த் எடுத்துரைத்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT