

அமெரிக்க அதிபர் தேர்தலை போல், திருப்பரங்குன்றம் தேர்தலில் திமுக எதிர்பாராத வெற்றி பெற்று அதிமுகவுக்கு ஷாக் ட்ரிட்மெண்ட் கொடுக்கும் என அக்கட்சி முன்னாள் அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
மதுரை அவனியாபுரம் மந்தையில் திமுக வேட்பாளர் சரவணனை ஆதரித்து நேற்று இரவு அக்கட்சி பொதுக்கூட்டம் நடந்தது. திமுக மாநில துணைப்பொதுச் செயலாளர் ஐ.பெரியசாமி தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது: டாக்டர் சரவணன் வெற்றிபெற்றால் கூப்பிட்ட குரலுக்கு ஓடி வர முடியும். ஒடி ஒளிய மாட்டார். திருப்பரங்குன்றத்தில் நடப்பதுதான் நியாயமான இடைத்தேர்தல். தஞ்சாவூரில், அரவக்குறிச்சியில் நடப்பது இடைத்தேர்தல் அல்ல. இந்த தொகுதிகளில் பண புழக்கம் இருப்பதாக நிறுத்தப்பட்டதாக தேர்தல் ஆணையம் கூறுகிறது. அப்படியென்றால், அந்த தொகுதி களில் எத்தனை வழக்குகள், யார் யார் மீது போட்டுள்ளனர், அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்பது பற்றி எந்த தகவலும் இல்லை.
நான் 12 முறை வெற்றி பெற்று எம்எல்ஏ ஆகியுள்ளேன். மக்கள் முகத்தை பார்த்து தொகுதி நிலவரத்தை சொல்லிவிடுவேன். இங்குள்ள மக்கள் முகத்தை பார்த்தாலே உறுதியாகிவிட்டது திமுக வெற்றி. அவர்கள் மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள். அமெரிக்கா அதிபர் தேர்தலில் எல்லோரும் ஹிலாரி கிளிண்டன்தான் வெற்றிபெறுவார்கள் என ஆரூடம் சொன்னார்கள். கருத்து கனிப்புகளும் அப்படிதான் வந்தது. ஆனால், அங்கு எதிர்பாராத வகையில் டொனால்டு ட்ரம் வெற்றிப்பெற்றார். அதுபோன்ற எதிர்பாராத வெற்றி திருப்பரங்குன்றத்தில் திமுகவுக்கு கிடைக்கப்போகிறது.
மூன்று தொகுதிகளிலும் திமுக வெற்றி பெற்றால் ஆட்சி மாற்றத்தை கொண்டு வந்துவிட முடியாது. ஆனால், அதிமுக ஆட்சியை துரிதமாக செயல்பட வைக்க தூண்டிவிட முடியும். கடந்த அதிமுக ஆட்சியில் சட்டத்துறைக்கு 150 கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கியது. நீதிமன்றங்கள் கட்டியிருக்கலாம். ஆனால், நீதிமன்றங்கள் கட்டாமல், அந்த பணத்தை தமிழக அரசு திருப்பி அனுப்பி உள்ளனர்.
பொருளாதார நிலையாக தமிழகம் மிக மோசமாக இருக்கிறது. பொதுப்பணித்துறை பணியிடங்கள் எல்லாம் காலியாக இருக்கிறது. இப்படியிருந்தால் எப்படி குடிநீர் விநியோகம், நீர் நிலைகளை பராமரிக்க முடியும். இதை முதலமைச்சரிடம் தெரிவிக்க அந்த துறை அமைச்சருக்கு துணிவில்லை. உசிலம்பட்டி 58 கால்வாய் திட்டம் பல ஆண்டிற்கு முன்பே தொடங்கிவிட்டனர். திமுக ஆட்சியில் ஒரளவு பணி முடிக்கப்பட்டுவிட்டது. ஆனால், இன்னும் அந்த பணியை முடிக்காமல் அதிமுக ஆட்சி இழுத்தடிக்கிறது. அந்த பகுதியை சேர்ந்த ஒ.பன்னீர் செல்வம் கூட அதைநிறைவேற்ற ஆர்வம் காட்வில்லை. பிறகு எப்படி இவர்கள் மக்களை பற்றி சிந்திப் பார்கள் என்றார்.
முஸ்லீம் லீக் தேசிய பொதுச் செயலாளர் காதர் மொய்தீன், முன்னாள் மேயர் குழந்தைவேலு, மாவட்ட திமுக செயலாளர்கள் மூர்த்தி, மணிமாறன், தளபதி, எம்எல்ஏ ஐ.பி.செந்தில்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
ஜெயலலிதா எங்களுக்கும் முதல்வர்தான்
துரைமுருகன் பேசுகையில், திருப்பரங்குன்றத்தில் எவ்வளவுதான் பண புழக்கம் இருந்தாலும் திமுக வெற்றி பெறுவது உறுதி. எல்லோருக்கும் உடல்நிலை பாதிப்பு வரதான் செய்யும். அதுபோலதான் முதல்வர் ஜெயலலிதா அப்போலோவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் எங்களுக்கும் முதல்வர்தான். அதனால், அவர் உடல் நலம் பெற்று திரும்பி வர வேண்டும் என்பதுதான் எங்களுடைய ஆசையும். ஆனால், அவரை அமைச்சர்கள் கூட பார்க்க முடியில்லை என்பதுதான் வேதனையாக இருக்கிறது, என்றார்.