Published : 26 Nov 2016 03:56 PM
Last Updated : 26 Nov 2016 03:56 PM

கம்யூனிஸ்ட் இயக்கத்தின் உற்சாகப் புரட்சியாளர் காஸ்ட்ரோ: ஜி.ஆர். புகழஞ்சலி

உலக கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கு உற்சாகமளிக்கக் கூடிய புரட்சியாளராக திகழ்ந்து, வழிகாட்டியவர் ஃபிடல் காஸ்ட்ரோ என்று ஜி.ராமகிருஷ்ணன் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.

ஃபிடல் காஸ்ட்ரோ மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்ட இரங்கல் செய்தியில், ''1959-ம் ஆண்டு ஃபிடல் காஸ்ட்ரோவும், சேகுவேராவும் இணைந்து கியூபாவில் அதிகாரத்திலிருந்த சர்வாதிகாரி பாடிஸ்டா ஆட்சியை மக்கள் ஆதரவோடு புரட்சியின் மூலம் வீழ்த்தினார்கள். தொடர்ந்து ஃபிடல் காஸ்ட்ரோ கியூப கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராகவும், கியூப தேசத் தலைவராகவும் திகழ்ந்தார்.

முதலாளித்துவத்தால் மக்கள் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண முடியாது சோசலிசம் தான் தீர்வு என்ற அடிப்படையில் ஃபிடல் காஸ்ட்ரோ கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் கியூபாவில் சோசலிச பொருளாதாரக் கொள்கையை அமலாக்கினார். அமெரிக்காவிற்கு 90 மைலுக்கு அருகில் இருக்கக் கூடிய கியூபாவை அழிக்க வேண்டுமென்ற நோக்கத்தோடு அந்நாட்டு மக்களுக்கு எதிராக அமெரிக்கா பொருளாதார தடை விதித்தது. ஃபிடல் காஸ்ட்ரோவை கொல்வதற்கு பலமுறை அமெரிக்கா முயற்சி எடுத்தது.

அமெரிக்காவின் சதி திட்டத்தையும், பொருளாதார தடையையும் முறியடித்து எதிர்கொண்டு கியூபாவில் சோசலிசத்தை நிர்மாணிப்பதில் ஃபிடல் காஸ்ட்ரோ வெற்றி பெற்றார். கியூபாவில் கல்வி இலவசம், சுகாதாரம் இலவசம் ஒப்பீட்டளவில் கியூபாவின் மக்கள் வாழ்க்கைத் தரம் வெகுவாக உயர்ந்தது.

காலனியாதிக்கத்திற்கு எதிராக, ஏகாதிபத்திய தலையீட்டிற்கு எதிராக போராடும் மக்களுக்கு, நாடுகளுக்கு கியூபா பேருதவி செய்தது. லத்தீன் அமெரிக்க நாடுகளில் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான இடதுசாரி சக்திகளின் போராட்டத்திற்கு பின்புலமாக ஃபிடல் காஸ்ட்ரோ இருந்தார். காலனியாதிக்கத்திற்கு எதிரான போராட்டத்தில் மட்டுமல்ல, பல நாடுகளுக்கு கியூபா மருத்துவர்களையும், ஆசிரியர்களையும் அனுப்பி சுகாதார, கல்வி சேவையும் செய்தது.

உலக கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கு உற்சாகமளிக்கக் கூடிய புரட்சியாளராக திகழ்ந்த, வழிகாட்டிய ஃபிடல் காஸ்ட்ரோவின் மறைவு உலகம் தழுவிய கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கும், ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கத்திற்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பாகும்.

அவருடைய மறைவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு செங்கொடி தாழ்த்தி இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது'' என்று ஜி.ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x