Published : 12 Sep 2022 03:51 PM
Last Updated : 12 Sep 2022 03:51 PM

கடைகளில் எலி பேஸ்ட்டை தனி நபர்களுக்கு விற்கக் கூடாது: தமிழக அரசு

சென்னை: எலி பேஸ்ட்டை தனி நபர் வாங்க வந்தால், அவர்களுக்கு தரக் கூடாது என்று அனைத்து கடைகளுக்கும் அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

உலக தற்கொலைத் தடுப்பு தினத்தை முன்னிட்டு சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் மனநல நல்லாதரவு மன்றம் (மனம்) திட்டம் துவக்க விழா மற்றும் ஊடகவியலாளர்களுடான கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மனம் திட்டத்தை தொடங்கி வைத்த பிறகு மேடையில் பேசிய அமைச்சர் மா. சுப்பிரமணியன், "மனம் நல ஆலோசனை இன்று காலத்தில் மிகவும் அவசியம். எல்லாம் நோய்களுக்கும் தீர்வு என்கின்ற வகையில் மருத்துவத் துறை பல சாதனைகளை செய்து கொண்டிருக்கிறது. உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மூலம் இன்றைக்கு உலகமே மிகப் பெரிய அளவில் அசத்தலான சாதனைகளை செய்து வருகிறது.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மன அழுத்தம் என்பது பெரிய அளவில் இருந்து வருகிறது. மன நலனை எப்படி பாதுகாப்பது என்பதற்கு பல்வேறு திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. சில ஆண்டுகளில் அனைத்து கல்லூரிகளிலும் இந்தத் திட்டம் தொடங்க இருக்கிறோம்.

1.32 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் நீட் தேர்வு குறித்து மன நல ஆலோசனை வழங்கி இருக்கிறோம். அதில் 564 மாணவர்கள் High risk என்று கருதப்பட்டு அவர்களுக்கு தொடர்ந்து ஆலோசனை வழங்கி வருகிறோம். நீட் தேர்வு மட்டுமின்றி 10, 12 வகுப்பு தேர்வு முடிவு வரும் பொழுது கூட மாணவர்கள் தற்கொலை செய்துள்ளனர். இந்த திட்டம் மூலம் அவர்களுக்கும் மன நல ஆலோசனை வழங்க இருக்கிறோம்.

தற்போது தற்கொலைக்கு பெண்கள் 90 சதவீதத்திற்கும் மேல் பயன்படுத்தும் பொருள் சாணி பவுடர்தான். கடந்த காலங்களில் எது செய்தாலும் ஒரு விசயம் இருந்தது. தற்போது அனைத்தும் செயற்கை வந்து விட்டது. எலி பேஸ்ட் விவசாயத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. ஆனால், அது தற்போது உயிரை எடுத்துக் கொண்டு இருக்கிறது.

எலி பேஸ்ட்டை தனி நபர் வாங்க வந்தால் அவர்களுக்கு தரக் கூடாது என்ற அனைத்து கடைகளுக்கு அரசு சார்பில் அறிவுறுத்த இருக்கிறோம். மேலும், வெளியில் கண்ணுக்கு தெரியும் வகையில் வைக்கக் கூடாது என்றும், மறைத்து வைத்து விற்க வேண்டும் என்று தெரிவிக்க இருக்கிறோம். சானிபவுடர் தமிழகத்தில் தடை செய்தாலும் வெளி மாநிலங்களில் இருந்து தான் அதிமாக இங்கு இறக்குமதி செய்கிறார்கள் அதனை தடுக்கவும் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று அமைச்சர் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x