Published : 12 Sep 2022 02:23 PM
Last Updated : 12 Sep 2022 02:23 PM

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நீட் பயிற்சி போதுமானதாக இல்லையா? - அன்பில் மகேஸ் விளக்கம்

சென்னை: “அரசுப் பள்ளி மாணவர்களுக்கு போதிய நீட் பயிற்சி வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது” என்று அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்தார்.

சென்னை சேத்துப்பட்டில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்ற பாரத சாரண, சாரணியர் விருது வழங்கும் விழாவில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பங்கேற்று மாநில பாரத சாரணர், சாரணிய இயக்கத் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார். அதனைத் தொடர்ந்து மாநில முதன்மை ஆணையராக பள்ளி கல்விக் துறை ஆணையர் நந்தகுமார் பொறுப்பேற்றுக் கொண்டார். பின்னர், பாரத சாரணர், சாரணிய இயக்கத்தில் சாதனை புரிந்தவர்களுக்கு பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி விருதுகளை வழங்கி கௌரவித்தார்.

அதன்பிறகு செய்தியாளர்களிடம் அமைச்சர் பேசுகையில், "கடந்த காலத்தில் கவனிக்கப்படாமல் இருந்த துறைகளை எல்லாம் தேடித் தேடி எடுத்து சரி செய்து வரும் பணியை மேற்கொண்டு வருகிறோம். சாரணர் இயக்கத்தில் தற்பொழுது 4 லட்சத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர். இதை 10 லட்சம் என்ற எண்ணிக்கை அடைவதை இலக்காக வைத்துள்ளோம். சாரணர் இயக்க மாணவர்களுக்கு மாவட்ட, மாநில தேசிய அளவில் முகாம்கள் நடத்த திட்டமிட்டுள்ளோம்.

இனி ஒவ்வொரு மாவட்டத்திற்கும் நான் ஆய்வு செல்லும்பொழுது சாரணர் இயக்கம் பற்றியும் பள்ளிகளில் ஆய்வு மேற்கொள்வேன். மாணவர்களை ஒருங்கிணைப்பேன். சாரணர் இயக்கத்திற்கு முதல் கட்டமாக ரூ.25 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. இனிவரும் காலங்களில் நடவடிக்கைகளை பார்த்து முதல்வரிடம் கவனத்திற்கு கொண்டு சென்று கூடுதல் நிதி வழங்கக் கேட்போம்.

நீட் தேர்வு விலக்கு பெறுவதற்கு சட்டப் போராட்டம் நடந்து வருகிறது. நீட் தேர்வு விலக்கில் வெற்றி பெறும் வரை நீட் தேர்வுக்கான பயிற்சி தொடர்ந்து தவறாமல் வழங்கப்படும். 4,000 அரசுப் பள்ளி மாணவர்கள் நீட் தேர்வில் தகுதி பெற்றுள்ளார்கள். அது எங்களுக்குப் போதாது. அரசுப் பள்ளி மாணவர்களுக்கு போதிய நீட் பயிற்சி வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டை என்னால் ஏற்க முடியாது. 2 வருடங்களாக பள்ளிக்கூடம் திறக்கப்படுமா மற்றும் பொதுத் தேர்வு நடைபெறுமா என்ற நிலை இருந்தது. தற்போது கொஞ்சம் கொஞ்சமாக தடைகளை உடைத்து சாதாரணமாக பள்ளிகள் நடைபெற்று வருகிறது .

மாதிரிப் பள்ளிகள் நாங்கள் கொண்டுவதற்கு முக்கியக் காரணம், தேசிய அளவில் நடைபெறும் தேர்வுகளிலும், முதன்மைக் கல்லூரிகளிலும், ஐஐடி, ஐஏஎம் போன்றவற்றிலும் நமது மாணவர்கள் அதிக அளவில் சேர வேண்டும் என்பதுதான். அதற்கு முதல் படிதான் இந்த மாதிரிப் பள்ளிகள்" என்று அமைச்சர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x