

குளிர்பானம் தயாரிப்பதற்காக தாமிரபரணி ஆற்றில் இருந்து தண்ணீர் எடுக்க உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
நெல்லை பாளையங்கோட் டையைச் சேர்ந்த பிரபாகர், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு: திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட மக்களின் விவசாயம் மற்றும் குடிநீர் தேவையை தாமிரபரணி ஆறு பூர்த்தி செய்கிறது. நெல்லை மாவட்ட மக்களின் குடிநீர் தேவைக்காக மட்டும் தாமிரபரணியில் இருந்து 12.5 கோடி லிட்டர் தண்ணீர் தினமும் எடுக்கப்படுகிறது. இது தவிர தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களின் குடிநீர் தேவைக் காக 10 கோடி லிட்டர் தண்ணீர் எடுக்கப்படுகிறது.
இந்நிலையில், கங்கைகொண் டானில் 1996-ல் 2 ஆயிரம் ஏக்கரில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக் கப்பட்டது. இங்கு 45 தொழிற் சாலைகள் உள்ளன. இங்கு 2004-ல் கோககோலா நிறுவனத்துக்கு 31.54 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டது. இந்த நிறுவனம் குளிர்பானம் தயாரிக்க தாமிரபரணியில் இருந்து தினமும் 9 லட்சம் லிட்டர் தண்ணீர் எடுத்து வருகிறது. ஆயிரம் லிட்டருக்கு ரூ.37.50 மட்டும் வசூலிக்கப்படுகிறது. இதே போல பெப்சி நிறுவனமும் குளிர்பானம் தயாரிக்க தாமிரபரணியில் தண்ணீர் எடுக்கிறது.
குளிர்பானம் தயாரிக்க தாமிரபர ணியில் இருந்து அதிகளவில் தண்ணீர் எடுப்பதால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. தாமிரபர ணியில் தற்போது போதிய தண்ணீர் இல்லை. எனவே குளிர்பான ஆலைகளுக்கு தாமிரபரணியில் இருந்து தண்ணீர் விநியோகிக்க தடை விதிக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி எஸ்.நாக முத்து, எம்.வி.முரளிதரன் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் லஜபதிராய் வாதிட்டார். விவசாயி கள் ஏற்கெனவே தண்ணீர் தட்டுப் பாடு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், குளிர்பான ஆலை களுக்கு எப்படி தண்ணீர் வழங்க இயலும்? எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், தாமிரபரணியில் இருந்து குளிர்பான ஆலைகளுக்கு தண்ணீர் விநியோகம் செய்ய இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டனர்.