Published : 12 Sep 2022 07:34 AM
Last Updated : 12 Sep 2022 07:34 AM

தமிழகத்தில் மின் கட்டண உயர்வால் அடுக்குமாடி குடியிருப்புவாசிகள் பாதிப்பு: பராமரிப்புக் கட்டணமும் கூடுதலாக வசூலிக்கப்படும்

சென்னை: தமிழகத்தில் மின் கட்டண உயர்வு நேற்று முன்தினம் முதல் அமலுக்கு வந்துள்ளது. அடுக்குமாடிக் குடியிருப்புகளில் உள்ள லிப்ட், மின் மோட்டார், வெளிப்புற மின்விளக்குகள் ஆகியவை பொதுப் பயன்பாட்டுக்கான மின் பிரிவின் கீழ் கொண்டு வரப்பட்டு, ஒரு யூனிட்டுக்கு ரூ.8 என கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இதுவரை இந்த பொதுப் பயன்பாட்டுக்கான கட்டணம், வீட்டுப் பிரிவுக்கான கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில், அடுக்குமாடிக் குடியிருப்புகளில் பொதுப் பயன்பாட்டுக்கான மின் கட்டணம், வீட்டுப் பிரிவுக்கான மின் கட்டண விகித அடிப்படையிலேயே வசூலிக்கப்படுகிறது.

இந்நிலையில், தமிழகத்தில் மட்டும் பொதுப் பயன்பாட்டுக்கான மின் கட்டணம் உயர்த்தி இருப்பது கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து நங்கநல்லூர் குடியிருப்போர் சங்க ஆலோசகர் வி.ராமாராவ் கூறும்போது, “அடுக்குமாடிக் குடியிருப்புகளில் பொதுப் பயன்பாட்டுக்காக பயன்படுத்தப்படும் லிஃப்ட், நீர் மோட்டார், மின் விளக்குகள் ஆகியவற்றுக்கான மின் கட்டணத்தை உயர்த்தி இருப்பது, குடியிருப்போருக்கு இரட்டைச் சுமையை ஏற்படுத்தியுள்ளது.

பொதுப் பயன்பாட்டுக்கான மின்சாரத்தையும், வர்த்தகப் பயன்பாட்டுக்கான மின் கட்டணத்தை நிர்ணயித்திருப்பது ஏற்புடையதல்ல. இதனால், அடுக்குமாடிக் குடியிருப்பில் இரவு நேரங்களில் பொதுப் பயன்பாட்டுக்கான மின் விளக்குகள் அணைக்கப்படும்.

இது திருட்டு சம்பவங்கள் நடைபெற வழிவகுக்கும். மேலும், பராமரிப்புக் கட்டணம் கூடுதலாக வசூலிக்கப்படும். எனவே, பொதுப் பயன்பாடுக்கான மின் கட்டண உயர்வை வாபஸ் பெற வேண்டும்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x