Published : 12 Sep 2022 06:20 AM
Last Updated : 12 Sep 2022 06:20 AM

திராவிடத்தில்தான் குஜராத் இருக்கிறது; பிரதமர் மோடியே ஒரு திராவிடர்தான்: ஹெச்.ராஜா கருத்து

சென்னையில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் எழுதிய ‘எவரும் எட்டமுடியாத 8 ஆண்டு சாதனைகள் மற்றும் திட்டங்கள்’ என்ற நூலை, பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா வெளியிட, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பெற்றுக்கொண்டார். சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாரிசுகள் இதில் பங்கேற்றனர். படம்: பு.க.பிரவீன்

சென்னை: திராவிடத்தில் குஜராத்தும் இருக்கிறது. எனவே, பிரதமர் நரேந்திர மோடியே ஒரு திராவிடர்தான் என்று பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்தார்.

இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் எழுதிய ‘நரேந்திர மோடி ஆட்சியில் எவரும் எட்ட முடியாத 8 ஆண்டு சாதனைகள் மற்றும் திட்டங்கள்’ என்ற நூல் வெளியீட்டு நிகழ்ச்சி சென்னை மயிலாப்பூரில் நேற்று நடைபெற்றது. பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா நூலை வெளியிட, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பெற்றுக் கொண்டார்.

நிகழ்ச்சியில் தலைவர்கள் பேசியதாவது: ஹெச்.ராஜா: தமிழகத்தில் தேச பக்தி, தெய்வ பக்தியை மழுங்கடிப்பதற்கான முயற்சிகள் நடக்கின்றன. இந்துக்கள் போராட முன்வராவிட்டால் கோயில்களின் சொத்துகள் அனைத்தும், பிற மத நிறுவனங்களின் சொத்துகளாக மாற்றி எழுதப்பட்டுவிடும்.

தமிழுக்கும், தேசியத்துக்கும் சம்பந்தம் இல்லை என்ற பிம்பம் உருவாக்கப்பட்டு வருகிறது. இங்கு தேசியவாதிகள்தான் தேசியத்துடன் சேர்த்து தமிழை வளர்த்துள்ளனர். திராவிடக் கட்சிகள் தமிழை அழிக்கவே செய்துள்ளன.

சுதந்திரம் அடைந்த பிறகு, இந்தியாவில் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. சுதந்திரத்துக்கு பிறகும், உத்தர பிரதேசத்தில் இருந்து உத்தராகண்ட், ஆந்திராவில் இருந்து தெலங்கானா என பல மாநிலங்கள் பிரிக்கப்பட்டுள்ளன. இப்போதும்கூட பிரிக்கலாம். தமிழகத்திலும் கொங்கு நாடு, பாண்டிய நாடு என்ற குரல்கள் கேட்கின்றன. திராவிடத்தில் குஜராத்தும் இருக்கிறது. எனவே, பிரதமர் மோடியே ஒரு திராவிடர்தான்.

அர்ஜுன் சம்பத்: தேசியவாதிகளும், தேசபக்தர்களும் தற்போது அவமானங்களை சந்தித்து வருகின்றனர். ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சி தன்னார்வ தொண்டு நிறுவனமாக மாறிவிட்டது. அறிவாலயத்தின் கொத்தடிமையாக மாறிவிட்ட காங்கிரஸில் தேசியவாதிகள் எப்படி இருக்க முடியும்.

1967-ம் ஆண்டுக்கு பிறகு தமிழகத்தின் வரலாறு மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில், தமிழகத்தில் தற்போது திருப்புமுனை ஏற்பட்டுள்ளது. செல்லும் இடங்களில் எல்லாம் பாஜகவுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. 2024 நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் நாற்பதும் நமதே என்ற முழக்கத்தை முன்னிறுத்த உள்ளோம்.

நாடாளுமன்ற தேர்தலில் ராமநாதபுரத்தில் பிரதமர் மோடியும், கோவையில் அமித் ஷாவும் போட்டியிட வேண்டும் என்று வானதி சீனிவாசனிடம் கோரிக்கை வைத்துள்ளேன். மோடி அரசின் 8 ஆண்டுகால சாதனைகள், திட்டங்களை வீடுதோறும் நாம் எடுத்துச் செல்ல வேண்டும்.

இவ்வாறு அவர்கள் பேசினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x