Published : 12 Sep 2022 06:18 AM
Last Updated : 12 Sep 2022 06:18 AM
சென்னை/கோவில்பட்டி: மகாகவி பாரதியார் நினைவு தினத்தையொட்டி ஆளுநர், அமைச்சர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.
மகாகவி பாரதியாரின் 101-வது நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதை முன்னிட்டு, சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் பாரதியார் படத்துக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். அப்போது, ஆளுநரின் மனைவி லட்சுமி ரவி உடன் இருந்தார்.
சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் பாரதியார் சிலைக்கு அருகே வைக்கப்பட்டிருந்த படத்துக்கு தெலங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.
தமிழக அரசு சார்பில் காமராஜர் சாலையில் உள்ள பாரதியார் சிலைக்கு அருகே வைக்கப்பட்டிருந்த படத்துக்கு சட்டத் துறை அமைச்சர் ரகுபதி, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, துணை மேயர் மு.மகேஷ்குமார், சென்னை மாநகராட்சி நிலைக் குழு தலைவர் சிற்றரசு, தமிழ் வளர்ச்சி, செய்தித் துறை செயலர் மகேசன் காசிராஜன், செய்தி மக்கள் தொடர்புத் துறை கூடுதல் இயக்குநர் சிவ.சு.சரவணன் ஆகியோர் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.
சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் இலக்கிய அணி தலைவர் பி.எஸ்.புத்தன் தலைமையில் பாரதியார் படத்துக்கு அக்கட்சியினர் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.
மெரினாவில் உள்ள பாரதியார் சிலைக்கு தமாகா தலைவர் ஜி.கே.வாசன் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். அப்போது, கட்சியின் பொதுச் செயலாளர் விடியல் சேகர், மாவட்ட தலைவர் முனவர் பாஷா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
பாரதியார் நினைவு தினத்தை முன்னிட்டு சென்னையில் பல இடங்களில் பல்வேறு அமைப்புகள் சார்பில் அவருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. பல்வேறு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன.
எட்டயபுரத்தில்...
பாரதியார் பிறந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் உள்ள மணிமண்டபத்தில் அவரது வெண்கலச் சிலைக்கு தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பெ.கீதாஜீவன், ஜீ.வி.மார்க்கண்டேயன் எம்எல்ஏ, மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
நிகழ்ச்சியில், கோட்டாட்சியர் க.மகாலட்சுமி, வட்டாட்சியர் கிருஷ்ணகுமாரி, ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் கஸ்தூரி சுப்புராஜ், பேரூராட்சி தலைவர் ராமலட்சுமி சங்கரநாராயணன் பங்கேற்றனர். ஏராளமான பள்ளி மாணவ, மாணவியர் பாரதியார் வேடமணிந்து வந்து மரியாதை செலுத்தினர்.
எட்டயபுரத்தில் பாரதியாரின் நினைவு இல்லத்தில் உள்ள அவரது சிலைக்கும் அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT