

திருச்சி: எம்.பி. பதவி என்பது எனது அடையாளத்தின் சிறு துளி. இதற்காக நான் போகாத இடத்துக்குப் போயிருக்கக் கூடாது என இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனத் தலைவரும், பெரம்பலூர் எம்.பியுமான பாரிவேந்தர் தெரிவித்துள்ளார்.
திருச்சியில் நேற்று நடைபெற்ற கட்சிப் பிரமுகர் இல்ல திருமண விழாவில், பாரிவேந்தர் பேசியது: வளர்ந்த கட்சிகள், கல்யாண மேடைகளில் பேசிதான் ஆட்சியைப் பிடித்திருக்கின்றன. சாதிஇ ல்லை என்று சொல்பவர்கள், தொகுதியில் எந்த சாதி மக்கள் அதிகமாக இருக்கிறார்களோ, அந்த சாதியைச் சேர்ந்தவரைத்தான் வேட்பாளராக நிறுத்துகின்றனர்.
நான், பாஜக கூட்டணியில் இருந்தபோது 2.40 லட்சம் வாக்குகள் பெற்றேன். பின்னர், வேறு கூட்டணியில் போட்டியிட்டு வெற்றி பெற்றேன். எம்.பி பதவி என்பது எனதுஅடையாளத்தின் சிறு துளி. இதற்காக நான் போகாத இடத்துக்குப் போயிருக்கக் கூடாது.
நான் தனித்துப் போட்டியிட்டிருந்தால்கூட, 10 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருப்பேன். இதை நினைத்து ஒவ்வொரு நாளும் வேதனைப்படுகிறேன். நாங்கள் அவசரப்பட்டு விட்டோம் என தெரிவித்தார்.
திமுக கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.பி ஆன பாரிவேந்தர். இவர் அண்மைக்காலமாக திமுகவுக்கு எதிரான மனநிலையில் இருந்து வந்தார். இந்தநிலையில், வெளிப்படையாக அது தொடர்பாக கருத்துகளை வெளியிட்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.