Published : 17 Nov 2016 14:53 pm

Updated : 17 Nov 2016 14:53 pm

 

Published : 17 Nov 2016 02:53 PM
Last Updated : 17 Nov 2016 02:53 PM

அதிமுக ஆட்சிக்கு மதிப்பெண் வழங்கும் வாய்ப்பாக இடைத்தேர்தலை பயன்படுத்துங்கள்: ராமதாஸ்

ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சியின் செயல்பாடுகளுக்கு மதிப்பெண் வழங்கும் வாய்ப்பாக இடைத்தேர்தலை மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''தமிழகத்தில் தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளுக்கு சனிக்கிழமை தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், அத்தொகுதிகளில் இன்றுடன் பிரச்சாரம் நிறைவடைகிறது. வாக்குப்பதிவுக்கு இன்னும் 48 மணி நேரத்திற்கு குறைவான அவகாசம் மட்டுமே இருக்கும் நிலையில், இந்தத் தேர்தலில் யாரை வெற்றி பெறச் செய்வது என்பது குறித்து முடிவெடுக்க நேரம் வந்துவிட்டது.


தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளுக்கான தேர்தல்களை தனித்துப் பார்க்கக்கூடாது. தமிழ்நாட்டில் கடந்த 6 மாதங்களாக நடைபெற்று வரும் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சியின் செயல்பாடுகளுக்கு மதிப்பெண் வழங்கும் வாய்ப்பாக இதை மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

கடந்த 6 மாதங்களில் சொல்லிக்கொள்ளும்படியாக எந்த திட்டமும் செயல்படுத்தப் படவில்லை. மாறாக தமிழகத்தின் உரிமைகளை தாரை வார்க்கும் வகையில், தமிழக மக்களால் கடுமையாக எதிர்க்கப்பட்டு வரும் தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டம், மின்சார வாரியங்களுக்கான உதய் திட்டம், மருத்துவப் படிப்புகளுக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு(NEET) ஆகிய திட்டங்களை செயல்படுத்த தமிழக அரசு ஒப்புக்கொண்டிருக்கிறது. இதன்மூலம் தமிழக மக்களுக்கு மிகப்பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தும் வகையில் மத்திய அரசிடம் தமிழக அரசு சரணடைந்திருக்கிறது.

தேசிய உணவுப் பாதுகாப்பு திட்டத்தை செயல்படுத்துவதால் அடுத்த 3 ஆண்டுகளில் தமிழகத்தில் பொது வினியோகத் திட்டத்திற்கு மூடுவிழா நடத்தப்படும். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை கிலோ ஒரு ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்த நியாய விலைக் கடை அரிசியை அதிமுக அரசு இலவசமாக வழங்குவதன் மூலம் ஒரு சராசரியான குடும்பத்திற்கு அதிகபட்சமாக மாதம் ரூ.20 மட்டுமே மிச்சமானது. ஆனால், உணவுப் பாதுகாப்பு திட்ட விதிகளின்படி மத்திய அரசின் மானியம் அடுத்த 3 ஆண்டுகளில் நிறுத்தப்படும் போது, நியாய விலைக் கடைகள் மூடப்படும். இதனால் ஏழைகள் உள்ளிட்ட அனைவரும் வெளிச்சந்தையில் தான் அரிசி வாங்க வேண்டும். இதற்காக, மாதம் ரூ.1000 வரை கூடுதல் செலவு ஏற்படும். இதுதான் வாக்களித்த ஏழைகளுக்கு அதிமுக அளிக்கவிருக்கும் பெரும் பரிசு ஆகும்.

அடுத்ததாக மின்வாரியங்களுக்கான உதய் திட்டம் செயல்படுத்தப்பட்டால், தமிழ்நாடு மின்வாரியம் லாபம் ஈட்டும் வரை 3 மாதங்களுக்கு ஒருமுறை மின்கட்டணம் உயர்த்தப்பட வேண்டும். ஆண்டுக்கு 4 முறை மின்கட்டணம் உயர்த்தப்பட்டால் ஏழை மற்றும் நடுத்தர மக்களின் நிலைமை மோசமாகிவிடும்.

அதேபோல், தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டால், மருத்துவப் படிப்பு என்பது தமிழக மாணவர்களுக்கு எட்டாக்கனியாகி விடும். இந்தத் தீமைகள் அனைத்தையும் நன்றாக உணர்ந்திருந்தும் அவற்றை தமிழக மக்கள் மீது திணிக்கத் துடிக்கிறது ஜெயலலிதா தலைமையிலான அரசு. இது ஒருபுறமிருக்க தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை.

அதிமுக ஆட்சிக்கு வந்தால் கல்விக்கடன்கள் ரத்து செய்யப்படும், பெண்களுக்கு 50% மானியத்தில் ஸ்கூட்டர் வழங்கப்படும், ஒரு லிட்டர் 25 ரூபாய்க்கு நுண்ணூட்டச் சத்து நிறைந்த பால் வழங்கப்படும், ஊழலை ஒழிப்பதற்கான லோக் அயுக்தா அமைப்பு ஏற்படுத்தப்படும் என்பன உள்ளிட்ட வாக்குறுதிகளை ஜெயலலிதா வழங்கியிருந்தார். ஆனால், இவற்றில் எதையும் நிறைவேற்றவில்லை.

மாறாக 85 லட்சம் பேரை வேலையில்லாதவர்களாக மாற்றியதும், தமிழகத்தின் கடன்சுமையை ரூ.5 லட்சம் கோடியாக உயர்த்தி, ஒவ்வொருவரையும் ரூ.69,444க்கு கடன்காரர்களாக்கியதும்தான் அதிமுக அரசின் சாதனை.

அதிமுக அரசின் தவறுகளை சுட்டிக்காட்டி, மக்கள் நலத் திட்டங்களை விரைவுபடுத்துவது தான் எதிர்க்கட்சியின் கடமையாகும். ஆனால், கடந்த தேர்தலில் 90 இடங்களில் வெற்றி வாய்ப்பை வழங்கி எதிர்க்கட்சி அந்தஸ்தையும் கொடுத்த மக்களுக்கு திமுக என்ன நன்றிக்கடன் செய்தது? மக்களின் பிரச்சினைகள் குறித்து ஒரு நாளாவது சட்டப்பேரவையில் திமுக குரல் கொடுத்ததா?

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட 234 உறுப்பினர்களும் மக்களுக்காக இதுவரை எதையும் செய்யவில்லை.

3 தொகுதி தேர்தல் முடிவுகள் அதிமுகவின் நிலையையோ, திமுகவின் நிலையையோ எவ்வகையிலும் மாற்றப்போவதில்லை. ஆனால், பாமகவுக்கு சாதகமாக முடிவுகள் அமைந்தால் பேரவையில் மக்களின் உண்மையான குரல் ஒலிக்கும். சட்டப்பேரவை ஜனநாயகம் தழைக்கும்.

எனவே, இந்தத் தேர்தலில் பாமக சார்பில் அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் ம.பாஸ்கரனுக்கும், தஞ்சாவூர் தொகுதியில் போட்டியிடும் ஜி.குஞ்சிதபாதத்துக்கும் மாம்பழம் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்யும்படி இரு தொகுதி வாக்காளர்களையும் கேட்டுக் கொள்கிறேன்'' என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.


அதிமுக ஆட்சிமதிப்பெண் வழங்கும் வாய்ப்புஇடைத்தேர்தல்பயன்படுத்திக் கொள்கராமதாஸ்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author