Published : 12 Sep 2022 07:07 AM
Last Updated : 12 Sep 2022 07:07 AM

நெசப்பாக்கம் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையப் பணிகள் ஆய்வு: விரைவாக முடிக்க தலைமைச் செயலர் அறிவுறுத்தல்

சென்னை நெசப்பாக்கத்தில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் நேற்று ஆய்வு மேற்கொண்டார் தலைமைச் செயலர் வெ.இறையன்பு. உடன், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைச் செயலர் சிவ்தாஸ் மீனா, சென்னை குடிநீர் வழங்கல் வாரிய மேலாண் இயக்குநர் ஆர்.கிர்லோஷ் குமார் உள்ளிட்டோர்.

சென்னை: சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை மற்றும் சென்னை குடிநீர் வாரியம் இணைந்து மேற்கொண்டு வரும் பல்வேறு பணிகளை தலைமைச் செயலர் வெ.இறையன்பு நேற்று ஆய்வு மேற்கொண்டார்.

குறிப்பாக, தொல்காப்பியப் பூங்கா, கோட்டூர்புரம் மாடுலர் சுத்திகரிப்பு நிலையம், சைதாப்பேட்டை தாடண்டர் நகர் மாடுலர் சுத்திகரிப்பு நிலையம், ஜி.என்.செட்டி சாலையில் மழைநீர் வடிகால் கட்டும் பணி, கோடம்பாக்கம் காசி திரையரங்கம் அருகில் மழைநீர் வடிகால் கட்டும் பணி, நெசப்பாக்கம் சுத்திகரிப்பு நிலையப் பணி உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தார்.

மேலும், கூவம், அடையாறு நதிகள் சீரமைப்புப் பணிகள், பக்கிங்ஹாம் கால்வாய் சீரமைபப்பு, எண்ணூர் கழிமுகப் பகுதி சுற்றுச்சூழல் சீரமைப்புப் பணிகளையும் ஆய்வு செய்தார்.

அடையாறில் மாடுலர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டு, சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது. அதேபோல, மாம்பலம் நீரோடையில் கலக்கும் கழிவு நீரைச் சுத்திகரிக்க சைதாப்பேட்டை தாடண்டர் நகரில் ரூ.14.21 கோடியில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

இவற்றையும், தேனாம்பேட்டை மண்டலம் ஜி.என்.செட்டி சாலையில் ரூ.6.2 கோடியில், 950 மீட்டர்நீளம் கொண்ட மழைநீர் வடிகால்பணி, கோடம்பாக்கம் மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டும் பணி ஆகியவற்றையும் தலைமைச் செயலர் ஆய்வு செய்தார்.

நெசப்பாக்கம் கழிவுநீரகற்று நிலையத்தில் ரூ.47.24 கோடியில், தினமும் 10 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையச் செயல்பாட்டையும் ஆய்வு செய்தார். இந்த சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து 12 கி.மீ. நீளத்துக்கு குழாய் அமைக்கும் பணிகள் முடிக்கப்பட்டு, போரூர் ஏரியில் நீரை நிரப்பும் சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது. இப்பணிகளை ஆய்வு செய்ததலைமைச் செயலர், விரைவாகபணிகளை முடிக்குமாறு அறிவுறுத்தினார்.

ஆய்வின்போது, நகராட்சி நிர்வாகத் துறைச் செயலர் சிவ்தாஸ் மீனா, நெடுஞ்சாலைத் துறைச் செயலர் பிரதீப் யாதவ், சென்னை குடிநீர் வாரிய மேலாண் இயக்குநர் கிர்லோஷ்குமார் உடனிருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x