Published : 12 Sep 2022 07:12 AM
Last Updated : 12 Sep 2022 07:12 AM
சென்னை: ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில், தேசிய அளவிலான உயிரியல் பூங்காக்களின் இயக்குநர்கள் மாநாடுநடைபெற்றது. இதில், உயிரியல் பூங்காக்களின் மேலாண்மை தொடர்பான செயல்பாட்டு மதிப்பீட்டு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.
உயிரியல் பூங்காக்கள் பெரியவை, நடுத்தரம், சிறியவை எனப்பிரிக்கப்பட்டு, அவற்றின் செயல்பாடுகள் அடிப்படையில் மதிப்பீடுசெய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, பூங்காக்களின் எதிர்காலத் திட்டம்,நோக்கம், நிலைப்பாடு , தேவைகள், நிலம், சுற்றுச்சூழல், பெருந்திட்டம், மேலாண்மைத் திட்டம், உயிரினங்களின் இனப்பெருக்கம் உள்ளிட்டவை ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.
இவற்றுக்கு மதிப்பெண் வழங்கப்பட்டு, 315 மதிப்பெண்ணுக்கு மேல் பெற்ற பூங்காவுக்கு மிக்க நன்று என்ற மதிப்பீடும், 252-க்கு மேல் 314-க்குள் பெற்ற பூங்காவுக்கு நன்று என்ற மதிப்பீடும், 168 முதல் 251வரை சிறப்பு என்றும், 167 வரை மதிப்பெண் பெற்றிருந்தால் மேலும் மேம்படுத்தப்பட வேண்டும் என்றும் மதிப்பிடப்படுகிறது.
இதில், திட்டமிடல் உள்ளிட்ட 3 பிரிவுகளில் முதலிடம் பிடித்துள்ள, தமிழகத்தின் வண்டலூர் அறிஞர்அண்ணா உயிரியல் பூங்கா, பெரியபூங்காக்களில் முதலிடம் பிடித்துள்ளது. இந்த பூங்காவைப் பொறுத்தவரை, விரைவில் சுகாதார அறிவுரைக் குழு அமைக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர, பூங்காவில் பசுமை எரிசக்தி பயன்பாடு, மழைநீர் சேகரிப்பு, நீர் மறுசுழற்சி ஆகியவை கட்டாயம் அமைக்கப்பட வேண்டும் என்றும் அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதுதவிர, 75 செ.மீ.க்கு அதிகமான தடுப்புகளை மேலும் குறைக்கவேண்டும். திறந்தவெளி அகழிகளில் அமைக்கப்பட்டுள்ள செயின்லிங்க் வேலிகள் அகற்றப்பட வேண்டும். பூங்காவில் தற்போதுள்ள இனப்பெருக்கத் திட்டங்களைத் தொடர்வதுடன், வனப் பகுதியில்இயற்கையான முறையில் விலங்குகளை விடுவிக்க வேண்டும் உள்ளிட்ட நடவடிக்கைகள் தொடர்ந்துஎடுக்க வேண்டும் என்றும் அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT