

ராகுல் காந்தியின் நடைபயணம் தோல்வி தான். இது முற்றிலும் சொகுசு யாத்திரை என்று தமிழக பாஜக பொதுச்செயலர் ஆர்.சீனிவாசன் தெரிவித்தார்.
பழநியில் பாஜக சார்பில் சுதந்திரப் போராட்ட வீரர் இமானுவேல் சேகரன் நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதில் பங்கேற்ற மாநில பொதுச்செயலர் ஆர்.சீனிவாசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
இமானுவேல் சேகரன் நினைவு தினத்தை அரசு விழாவாக அறிவிக்க வேண்டும். மின்சாரத்தை தொட்டால் ஷாக் அடிக்கும் என்பது போய் தற்போது மின் கட்டண உயர்வால் ரசீதை தொட்டாலே ஷாக் அடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஒவ்வொரு தமிழன் மீதும் ரூ.1.25 லட்சம் கடன் இருப்பதாகக் கூறி ஆட்சிக்கு வந்த திமுக அரசு தற்போது ஒவ்வொருவர் மீதும் ரூ.2 லட்சமாக கடன் தொகை உயர்த்தியுள்ளது. மோசமான நிதி நிர்வாகத்தால் ரூ.7 லட்சம் கோடியாக தமிழக அரசின் கடன் தொகை உயர்ந்துள்ளது.
குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 போன்ற எந்தத் தேர்தல் வாக்குறுதியையும் தமிழக அரசு நிறைவேற்றவில்லை. ராகுல் காந்தியின் நடைபயணம் தோல்வி தான். இது முற்றிலும் சொகுசு யாத்திரை.
பழைய ஓய்வூதியத் திட்டத்தை கொண்டு வருவோம் என்று கூறி ஆட்சிக்கு வந்த திமுக, தற்போது அதை நடைமுறைப்படுத்த முடியாது என்று நிதி அமைச்சர் கூறுகிறார். தேர்தல் வாக்குறுதி கொடுத்து ஏமாற்றிய திமுக மீது 420 சட்டப் பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும். ஊழல் குற்றச்சாட்டுக்காக மின் துறை அமைச்சர் பதவி விலக வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.