

வேலூர் மத்திய சிறையில் முருகன் 4-வது நாளாக நேற்று உண்ணாவிரதத்தை தொடர்ந்தார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற முருகன் வேலூர் மத்திய ஆண்கள் சிறையில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக அடைக்கப்பட்டுள்ளார். இவரது மனைவி நளினி பரோலில் வெளியே வந்து காட்பாடி அருகே உறவினர் வீட்டில் தங்கியுள்ளார்.
இதனைத்தொடர்ந்து, முருகன் தனக்கும் பரோல் வழங்க வேண்டும் என சிறைத்துறை நிர்வாகத்திடம் கோரிக்கை மனு அளித்தார். ஆனால், முருகன் தங்கியிருந்த சிறை அறையில் செல்போன் பறிமுதல் செய்யப்பட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதால் அவருக்கு பரோல் வழங்க முடியாது என சிறைத்துறை நிர்வாகம் தெரிவித்தது.
இதனைத்தொடர்ந்து, தனது மீது உள்ள வழக்குகளை விரைவாக விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தி முருகன் கடந்த 8-ம் தேதி முதல் வேலூர் மத்திய ஆண்கள் சிறையில் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். நேற்று 11-ம் தேதி முருகன் தனது 4-வது நாள் உண்ணாவிரத போராட்டத்தை தொடர்ந்தார்.
சிறையில் அவருக்கு வழங்கப் படும் உணவுகளை வாங்க மறுத்து மவுன விரதம் இருந்து தொடர்ந்து உண்ணாவிரத போராட்டத்தை முருகன் நடத்தி வருகிறார். அவரது போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர சிறைத்துறை அதிகாரிகள் தொடர்ந்து அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.