Published : 31 Oct 2016 01:13 PM
Last Updated : 31 Oct 2016 01:13 PM

மொழிவாரி மாநிலங்கள் அமைந்த 60-வது ஆண்டு விழா: கருணாநிதி வாழ்த்து

மொழிவாரி மாநிலங்கள் அமைந்த 60-வது ஆண்டையொட்டி திமுக தலைவர் கருணாநிதி வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளார்.

இத் தருணத்தில் தமிழ் மக்களை எல்லாம் வாழ்த்துவதாகவும் தமிழ்நாடு என்று பெயர்அமைய பாடுபட்ட தலைவர்களை எல்லாம் போற்றுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில், "நாளை நவம்பர் 1 - 1956ஆம் ஆண்டு நவம்பர் 1ஆம் தேதி தான், மொழிவழி மாநிலங்கள் பிரிந்து, தமிழ்நாடு தனி மாநிலமாகவும், ஆந்திரா தனி மாநிலமாகவும், கேரளா தனி மாநிலமாகவும், கர்நாடகா தனி மாநிலமாகவும் பிரிந்து, அறுபது ஆண்டுகள் ஆகின்றன.

பேரவையில் பேசிய இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர், ஜீவா "இந்த அவையில் கன்னடர் இருக்கிறார்கள், தெலுங்கர் இருக்கிறார்கள், கேரள தேசத்தினர் இருக்கிறார்கள், ஆனால் நவம்பர் முதல் தமிழர்கள் மட்டுமே இருக்கப் போகிறார்கள் என்பதை நினைக்கும் போது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது" என்று கூறினார்.

மொழி வழி மாநிலம் அமைய பெரும் பாடுபட்டவர்கள் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, பெருந்தலைவர் காமராஜர், தோழர் ஜீவா, சிலம்புச் செல்வர், சங்கரலிங்கனார், நேசமணி போன்ற தலைவர்களாவர். அதற்காக பல போராட்டங்கள் எல்லாம் நடைபெற்றன.

அந்தக் காலத்தில் "மதராஸ் ஸ்டேட்" (சென்னை ராஜதானி) என்று தான் அழைக்கப்பட்டு வந்தது. மொழிவழி மாநிலங்கள் பிரிந்த போதும், "தமிழ்நாடு" என்று பெயர் சூட்ட மறுத்தது அப்போதிருந்த காங்கிரஸ் அரசு.

இந்த மாநிலத்தின் பெயர் "மதராஸ்" என்று அழைக்கப்பட்டதை, "தமிழ்நாடு" என்று பெயர் சூட்டும் தீர்மானத்தை 1967ஆம் ஆண்டு ஜுலை 18ஆம் தேதியன்று அண்ணா தான் முதலமைச்சராக இருந்து சட்டப் பேரவையில் கொண்டு வந்தார். அந்தத் தீர்மானம் ஒருமனமாக நிறைவேறியது.

அப்போது அண்ணா பேரவைத் தலைவராக இருந்த ஆதித்தனார் அவர்களை நோக்கி, "சட்டமன்றத் தலைவர் அவர்களே, வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்மானத்தை நிறைவேற்றியிருக்கின்ற இந்த நன்னாளில் நான் "தமிழ்நாடு” என்று சொல்வதற்கும், அவை உறுப்பினர்கள் "வாழ்க" என்று சொல்வதற்கும் தங்களுடைய அனுமதியைக் கோருகிறேன்" என்றார்.

பேரவைத் தலைவர் உடனே அதற்கு ஒப்புதல் அளித்தார். அதன் பின்னர், "தமிழ்நாடு" என்று அண்ணா மூன்று முறை உரக்கக் குரல் எழுப்பவும், எல்லா உறுப்பினர்களும் "வாழ்க" என்று என்று முழக்கமிட்ட சம்பவமும் நடைபெற்றது.

அவ்வாறு பேரறிஞர் அண்ணா தமிழகச் சட்டப் பேரவையில் "தமிழ்நாடு" என்று பெயர் சூட்டிய தீர்மானத்திற்கு அடுத்த ஆண்டு ஐம்பதாம் ஆண்டு பிறக்க இருக்கின்ற நேரத்தில் மொழிவழி மாநிலங்கள் பிரிந்து நாளையோடு அறுபதாம் ஆண்டு நிறைவு பெறுகின்ற நேரத்தில் தமிழ் மக்களை எல்லாம் வாழ்த்துகிறேன். தமிழ்நாடு என்று பெயர்அமைய பாடுபட்ட தலைவர்களை எல்லாம் போற்றுகிறேன்"

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x