ஆமை வேகத்தில் அத்திக்கடவு அவினாசி திட்டம்: இபிஎஸ் சாடல் 

எடப்பாடி பழனிசாமி | கோப்புப்படம்
எடப்பாடி பழனிசாமி | கோப்புப்படம்
Updated on
1 min read

திருப்பூர்: "2022 டிசம்பர் வந்தால்கூட அத்திக்கடவு அவினாசி திட்டத்தை நிறைவேற்றுவார்களா? என்பது கேள்விக்குறியாக உள்ளது. அந்தளவுக்கு துரிதமாக செயல்படக்கூடிய அரசு இந்த ஸ்டாலின் அரசு. ஆமை வேகத்தில் இந்த திட்டத்தை நிறைவேற்றிக் கொண்டுள்ளனர்" என்று அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

திருப்பூர் மற்றும் கோவையில் அதிமுக சார்பில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொள்கிறார். இந்நிலையில் அவினாசியில் இன்று நடந்த நிகழ்வில், அதிமுக தொண்டர்கள் மத்தியில் அவர் பேசியது: " முன்னாள் முதல்வர் ஜெயலலிதா காலத்திலேயே அத்திக்கடவு அவினாசி திட்டத்துக்காக கோரிக்கை வைத்தீர்கள். அவரது மறைவுக்குப் பின்னர், இந்த கோரிக்கையை கவனமாக பரிசீலித்த அதிமுக அரசு ரூ.1652 கோடி மதிப்பீட்டில், மிகப்பெரிய அற்புதமான திட்டம் அத்திக்கடவு அவினாசி திட்டம்.
அத்திட்டத்திற்காக நானே நேரில் வந்து இங்கு அடிக்கல் நாட்டிவிட்டுச் சென்றேன்.

இன்றைய தினம் அந்த திட்டம் நிறைவேற்றப்பட்டிருந்தால், வறன்ட ஏரிகள் எல்லாம் நிரம்பியிருக்கும். பவானி சாகர் அணையிலிருந்து உபரி நீராக வெளியேறுகின்ற நீரெல்லாம், கடலில் போய் வீணாக கலக்கிறது. ஆனால் இந்த திமுக அரசு, திறமையற்ற முதல்வர் ஸ்டாலினின் அரசு, நாம் கொண்டுவந்த திட்டம் என்ற ஒரே காரணத்திற்காக இந்த திட்டத்தை துரிதப்படுத்தாமல், வேகப்படுத்தாமல், மெத்தனப்போக்கின் காரணமாக அத்திக்கடவு அவினாசி திட்டம் இன்னும் முழுமை பெறாமல் இருக்கிறது.

கிட்டத்தட்ட ஆட்சி மாற்றம் ஏற்படுவதற்கு முன், 2021 டிசம்பரில் அத்திக்கடவு அவினாசி திட்டம் நிறைவுபெற்று நாங்கள் திறப்பதாக முடிவு செய்திருந்தோம். ஆனால், 2022 டிசம்பர் வந்தால்கூட இந்த திட்டத்தை நிறைவேற்றுவார்களா என்பது கேள்விக்குறியாக உள்ளது. அந்தளவுக்கு துரிதமாக செயல்படக்கூடிய அரசு இந்த ஸ்டாலின் அரசு. ஆமை வேகத்தில் இந்த திட்டத்தை நிறைவேற்றிக் கொண்டுள்ளனர்.

ஒரு சொட்டு நீர் கூட வீணாகக்கூடாது என்ற எண்ணத்தில் அதிமுக ஆட்சிக் காலத்தில் குடிமராமத்து திட்டத்தைக் கொண்டு ஏரி, குளம், குட்டைகள் எல்லாம் தூர் வாரினோம். தூர் வாரப்பட்ட மண்ணை விவசாயிகள் விலையில்லாமல் எடுத்துச் சென்று விவசாயிகள் அவர்களது நிலத்திற்கு இயற்கை உரமாக பயன்படுத்தினார்கள். ஆனால் இன்று ஒரு லோடுக்கு ரூ.1000 கமிசன் கொடுத்தால்தான் அந்த சவுடு மண்ணையே அள்ள முடியும்.

முதல்வர் ஸ்டாலினிடம் மக்கள் என்னென்னவோ எதிர்பார்த்தார்கள். 10 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சிக்கு வந்ததால், தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளையெல்லாம் நிறைவேற்றுவார்கள் என கனவு கண்டார்கள். அந்த கனவெல்லாம் கானல் நீராக போய்விட்டது. திமுக மக்களுக்கு கொடுத்த எந்த வாக்குறுதியும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை" என்று அவர் பேசினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in