ஆந்திர கடலோரப் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்

ஆந்திர கடலோரப் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்
Updated on
1 min read

சென்னை: ஆந்திர கடலோரப் பகுதியில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை பெய்யக் கூடும்.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக் கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

ஆந்திர கடலோரப் பகுதிகளை ஒட்டிய வங்கக்கடல் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நிலவுகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக் கூடும்.

இதன் காரணமாக 11-ம் தேதி தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி,மின்னலுடன் மிதமான மழை பெய்யக் கூடும். நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 12, 13, 14-ம் தேதிகளில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.

சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.

11-ம் தேதி மன்னார் வளைகுடாமற்றும் அதனை ஒட்டிய தென்தமிழக கடலோரப் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிமீ வேகத்திலும், வடக்கு ஆந்திரா, ஒடிசா கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மணிக்கு 45 முதல் 65 கிமீ வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக் கூடும். எனவே இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in