Published : 11 Sep 2022 04:35 AM
Last Updated : 11 Sep 2022 04:35 AM
மின்கட்டண உயர்வு அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளதாக கோவை மாவட்டத்தில் உள்ள குறுந்தொழில் நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர் சங்கம் ‘டாக்ட்’ மாவட்டத் தலைவர் ஜேம்ஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
மின்கட்டண உயர்வு தொடர்பாகநடைபெற்ற அனைத்து கருத்து கேட்பு கூட்டங்களிலும் மக்கள்எதிர்ப்பு தெரிவித்த நிலையிலும் தற்போது கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. மின் கட்டணத்தை உயர்த்தக் கூடாது என தொழில் அமைப்புகள் சார்பில் மின்சாரத்துறை அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தும் கட்டணத்தை உயர்த்தி உள்ளனர்.
இதுமட்டுமின்றி ஒரு கிலோ வாட்டுக்கு ரூ.35-ல் இருந்து ரூ.75 ஆகவும், காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை உச்ச நேரப் பிரிவின்கீழ் ‘3பி’ என்ற தொழில் நிறுவனங்களுக்கு வழங்கப்படும் மின்சாரமும் இணைக்கப்பட்டு தனி மீட்டர் பொருத்தி கட்டணம் நிர்ணயிக்கப்படும் எனவும் தெரிய வந்துள்ளது.
இது போன்று பல்வேறு கட்டணங்களை உயர்த்திஉள்ளனர். இதனால் தமிழகத்தில் உள்ள குறுந்தொழில் நிறுவனங்கள் பிற மாநிலங்களில் உள்ள தொழில்நிறுவனங்களுடன் போட்டியிட முடியாத நிலை உருவாகும். எனவே மின்கட்டண உயர்வை திரும்பப்பெற முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கோவை, திருப்பூர் மாவட்ட குறுந்தொழில் மற்றும் ஊரக தொழில் முனைவோர் சங்க ‘காட்மா’தலைவர் சிவக்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் 40,000-க்கும் மேற்பட்ட குறுந்தொழில் நிறுவனங்கள் செயல்படுகின்றன. இவற்றில்5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர். மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதால் தொழில் நிறுவனங்களுக்கு ஒரு யூனிட் மின்சாரக் கட்டணம் ரூ.6.35-ல் இருந்து ரூ.7.50-ஆக அதிகரிக்கும்.
இது தவிர மின் இணைப்புக்கான நிலை கட்டணமும், உச்ச நேர மின் கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது.
ஏற்கெனவே கரோனா தொற்று பரவல் அதை தொடர்ந்து கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நிலவிய மூலப்பொருட்கள் விலை ஏற்றம்ஏற்படுத்திய தாக்கத்தால் தொழில்முனைவோர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போதுமின்கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது.
இது லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை கடுமையாக பாதிக்கும். எனவே குறுந்தொழில் நிறுவனங்களுக்கு நிலை கட்டண உயர்வு மற்றும் உச்ச நேர மின்பயன்பாடுக்கான கட்டண உயர்வு உள்ளிட்டவற்றில் இருந்து முற்றிலும் விலக்கு அளிக்க வேண்டும், என தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT