

உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய் துள்ள மனுவை திரும்பப் பெற்று, உடனடியாக காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என வலியுறுத்தி மத்திய நீர்வளத் துறை செயலருக்கு தமிழக தலைமைச் செயலர் கடிதம் எழுதியுள்ளார்.
இது தொடர்பாக மத்திய நீர்வளத்துறை செயலாளர் சசி சேகருக்கு தமிழக தலைமைச் செயலாளர் பி.ராமமோகன ராவ் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை செயல்படுத்தும் விதமாக தற்காலிகமாக காவிரி மேலாண் மைக் குழு அமைக்கப்படும் என மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் கடந்த 2013-ம் ஆண்டு மே 10-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார். காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நதிநீர் முறைப்படுத்தும் குழுவை அமைக்க வேண்டும் என மத்திய அரசை தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
காவிரி நதிநீர் தொடர்பாக கடந்த 29-ம் தேதி டெல்லியில் நடந்த கூட்டத்தில் முதல்வர் ஜெய லலிதாவின் உரையை நான் தாக்கல் செய்தேன். அதில் ‘காவிரியை நம்பியுள்ள மாநிலங்களின் கருத் துக்கள் அடிப்படையில் நடுவர் மன்ற உத்தரவின்படி, தொழில்நுட்ப அதிகாரிகளால் நிர்வகிக்கப்படும், நடுநிலை வாய்ந்த தொழில்நுட்பக் குழுவான காவிரி மேலாண்மை வாரியத்தை அமைப்பது அவசியம் என்பதில் எனக்கு எப்போதும் நம்பிக்கை உள்ளது. எனவே, உச்ச நீதிமன்றம் அறிவித்த 4 வாரங்கள் வரை காத்திருக்காமல் உடனடியாக காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என மத்திய அரசை கேட்டுக் கொள்கிறேன்’ என முதல்வர் தெரிவித்திருந்தார்.
அதன்பின், செப்டம்பர் 30-ம் தேதி உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், காவிரி மேலாண்மை வாரியத்தை அக்டோபர் 4-ம் தேதிக் குள் அமைக்க வேண்டும் என கூறப் பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து, காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின் அடிப்படையில் தமிழகம், கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி ஆகியவை தங்களது பிரதிநிதிகள் தொடர்பான தகவலை தாக்கல் செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோஹத்கி தெரிவித்தார். இதன்படி, அக்டோபர் 1-ம் தேதி மாலை 4 மணிக்குள் மாநிலங்கள் தங்கள் பிரதிநிதிகளை அறிவிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து தமிழக அரசின் சார்பில் காவிரி மேலாண்மை வாரியத்துக்கான பிரதிநிதியை தேர்வு செய்து அறிவிக்க வேண்டும் என தமிழக தலைமைச் செயலருக்கு மத்திய நீர்வளத்துறை இணைச் செயலர் கடந்த 30-ம் தேதி கடிதம் எழுதியிருந்தார். அதன்படி, காவிரி தொழில்நுட்பக் குழு வின் தலைவரான ஆர்.சுப்பிர மணியனை தமிழக பிரதிநிதி யாக தேர்வு செய்து தமிழக அரசு அறிவித்தது.
இந்நிலையில், உச்ச நீதிமன் றத்தின் 30-ம் தேதி தீர்ப்பை திருத்தக் கோரி மத்திய அரசு சார்பில் நேற்று முன்தினம் மனு தாக்கல் செய்யப் பட்டது. காவிரி மேலாண்மை வாரி யத்தை தற்போது அமைக்க முடி யாது என்றும் தெரிவிக்கப் பட்டது. மத்திய அரசு தனது நிலைப்பாட்டில் திடீரென பின்zவாங்கியதற்கான காரணத்தை எங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை.
உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவை மத்திய அரசு திரும்பப் பெற்று, காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடி யாக அமைக்க வேண்டும். தமிழகத்துக்கு நீதி கிடைக்கச் செய்ய வேண்டும்.
இவ்வாறு கடிதத்தில் கூறியுள்ளார்.