

ஆலந்தூர் – பரங்கிமலை இடையே மெட்ரோ ரயில் சேவை நேற்று காலை தொடங்கியது. இதனால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சென்னையில் 2-வது கட்டமாக சின்னமலை – விமான நிலையம் இடையே மெட்ரோ ரயில் சேவையை கடந்த மாதம் 21-ம் தேதி முதல்வர் ஜெயலலிதா தொடங்கிவைத்தார். அப்போதே, பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையத்தையும் அவர் தொடங்கிவைத்தார். ஆனால், அந்த தடத்தில் மெட்ரோ ரயில்களை இயக்க ரயில்வே பாதுகாப்பு ஆணையரகம் ஒப்புதல் அளிக்காததால், மெட்ரோ ரயில்கள் இயங்காமல் இருந்தன.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு ஆலந்தூர் – பரங்கிமலை இடையே 1.3 கி.மீ தூரம் மெட்ரோ ரயில் சேவையை தொடங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதையடுத்து, நேற்று காலை 6 மணி முதல் இந்த தடத்தில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டது. இதனால்,பரங்கிமலையில் இருந்து கோயம்பேடுக்கு நேரடியாக மெட்ரோ ரயிலில் செல்லலாம். இதற்கான கட்டணம் ரூ.40 ஆகும். ஆட்டோ,கால்டாக்சி போன்ற போக்குவரத்துகளை ஒப்பிடும்போது இந்த கட்டணம் குறைவாகும். ஆதம்பாக்கம், மடிப்பாக்கம், கீழ்கட்டளை,
உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மக்களும், மின்சார ரயில்களில்பயணம் செய்யும் மக்களும் இதன்மூலம் பரங்கிமலையில் இருந்து கோயம்பேடுக்கு நேரடியாக செல்ல முடியும். இந்த புதிய சேவை பயணிகளிடம் வரவேற்பை பெற்றுள்ளது.
குடிநீர் வசதி இல்லை
பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையத்தில் இருக்கை வசதி, குடிநீர் வசதி இல்லாதது பயணிகளுக்கு ஒரு குறையாக உள்ளது. இந்த வசதிகளை விரைவில் ஏற்படுத்தித் தரவேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் சில பயணிகள் கூறும்போது, “பரங்கிமலையில் இருந்து கோயம்பேடுக்கு நேரடியாக மெட்ரோ ரயில் சேவையை தொடங்கியுள்ளது மகிழ்ச்சியாக இருக்கிறது. இதனால் போக்குவரத்து நெரிசல் குறையும். இருப்பினும், இங்கிருந்து வேறொரு இடத்துக்கு செல்ல போதிய பேருந்து வசதிகள் இல்லை. எனவே இங்கிருந்து ஆதம்பாக்கம், கீழ்கட்டளை போன்ற இடங்களுக்கு சிறிய பேருந்துகளை இயக்கினால் பயனுள்ளதாக இருக்கும்’’ என்றனர்.
புதிய தடத்தில் ரயில்போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது குறித்து மெட்ரோ ரயில் அதிகாரிகள் கூறும்போது, “ஆலந்தூரில் இருந்து பரங்கிமலைக்கு 1.3 கி.மீ தூரத்துக்கு மெட்ரோரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, விமானநிலையம் – சின்னமலை, ஆலந்தூர் – கோயம்பேடு மெட்ரோ ரயில் சேவையில் தற்போது தினமும் 15 ஆயிரம் பேர் பயணம் செய்து வருகின்றனர். தற்போது, பரங்கிமலை மின்சார
ரயில்வே நிலையத்தை இணைத்துள்ளதால் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம்” என்றார்.
பறக்கும் ரயில், மின்சார ரயில், மெட்ரோ ரயில் ஆகியவற்றை இணைக்கும் வகையில் ரூ.100 கோடி செலவில் பிரம்மாண்ட மையமாக பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு ஷாப்பிங் மால், உணவகங்கள் ஆகியவற்றையும் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னையில் சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களுக்கு அடுத்தபடியாக பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையம் சுமார் 1.25 லட்சம் சதுர அடிகளில்பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது. 2 மாடியில் அமைக்கப்பட்டுள்ள இந்த மெட்ரோ ரயில் நிலையத்தில் முதல்தளத்தில் பறக்கும்ரயில்சேவையை இணைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 2-வது தளத்தில் மெட்ரோ ரயில் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. கீழ்தளத்தில் ஒரே நேரத்தில் சுமார் 500 வாகனங்களை நிறுத்தும் வகையில் பிரம்மாண்டமான வாகனங்கள் நிறுத்துமிடம் அமைக்கப்பட்டுள்ளது. அருகேயுள்ள பரங்கிமலை
மின்சார ரயில் நிலையத்தில் இருந்து மெட்ரோ ரயில் நிலையத்துக்கு வந்து செல்லும் வகையில் நுழைவாயில்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தற்போது மெட்ரோ ரயில், மின்சார ரயில் சேவை ஆகியவை இணைக்கப்பட்டுள்ளன. பறக்கும் ரயில் சேவையும் இத்துடன் விரைவில் இணைக்கப்படவுள்ளது. இது தொடர்பாக மெட்ரோ ரயில் உயர் அதிகாரிகள் கூறியதாவது:
சென்னை கடற்கரை – வேளச்சேரி இடையே இயக்கப்படும் பறக்கும் ரயில்களும், சென்னை கடற்கரை -தாம்பரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் வரை செல்லும் மின்சார ரயில்களும், மெட்ரோ ரயில் சேவையும் இணையும் முக்கிய இடமாக பரங்கிமலை உள்ளது. இங்கு பயணிகள் அதிகளவில் வருவார்கள் என்பதால், அதற்கு ஏற்றவாறு பல்வேறு வசதிகளை ஏற்படுத்தியுள்ளோம். மற்ற இடங்களில் மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்க ரூ.60 கோடி வரையில்தான் செலவாகும். ஆனால், பரங்கிமலையில் மெட்ரோ ரயில் நிலையம் அமைக்க ரூ.100 கோடி செலவிடப்பட்டுள்ளது. இந்த
ரயில் நிலையத்தில் மற்ற ரயில் நிலையங்களைக் காட்டிலும் 2 மடங்கு வசதிகள் இருக்கும். குறிப்பாக தேவையான அளவுக்கு மின் தூக்கிகள், நகரும் படிக்கட்டுகள், டிக்கெட் கவுன்ட்டர்கள் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் ஏற்படுத்தப்படவுள்ளன.
முதல் தளத்தில் 14 ரயில் பெட்டிகள் கொண்ட பறக்கும் ரயில் வந்து செல்லும் வகையில் நடைமேடைகள் அமைக்கப்பட்டுள்ளன. 2-வது தளத்தில் இருந்து மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும். அருகேயுள்ள பறக்கும் மின்சார ரயில்பயணிகள் வந்து செல்ல நுழைவாயில் அமைக்கப்பட்டுள்ளது.
அடுத்த சில ஆண்டுகளில் பயணிகள் அதிகளவில் வரும்போது வெளியூர் செல்லும் விரைவு ரயில்கள் இங்கு நின்று செல்லும் வகையில் ரயில்வே துறையிடம் வலியுறுத்தப்படும். மேலும் இந்த மெட்ரோ ரயில் நிலையத்தின் தரைத்தளம் மற்றும் முன் பகுதியில் ஷாப்பிங் மால்கள், உணவகங்கள், வங்கி கிளை போன்றவை திறக்கவும் திட்டமிட்டுள்ளாம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
படங்கள்: ம.பிரபு