Published : 11 Sep 2022 04:35 AM
Last Updated : 11 Sep 2022 04:35 AM

அனுமதி, உரிய வசதிகள் இல்லாமல் இயங்கும் விடுதிகளை மூட நடவடிக்கை: அமைச்சர் கீதா ஜீவன் தகவல்

அமைச்சர் கீதா ஜீவன் | கோப்புப் படம்

சென்னை

அனுமதி, உரிய வசதிகள் இல்லாமல் இயங்கும் விடுதிகளை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.

தமிழக சமூக பாதுகாப்பு துறை சார்பில் ‘குழந்தை பாதுகாப்பு தகவல் மேலாண்மை மற்றும் கண்காணிப்பு அமைப்பு’ என்ற புதிய இணையதளம் தொடக்க நிகழ்ச்சி சென்னை கெல்லீஸில் உள்ள சமூக பாதுகாப்பு துறை இயக்குநர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.

இணையதள சேவையை சமூகநலத் துறை அமைச்சர் கீதா ஜீவன் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

மின் ஆளுமை மூலமாக தற்போது இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. சமூக நலத் துறையின் கீழ் உள்ள அனைத்து இல்லங்களையும் கண்காணிக்க இந்த இணையதளம் உதவிகரமாக இருக்கும். கரோனாவால் பெற்றோரை இழந்த 14 ஆயிரம் பேருக்கு உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.

சமூக நலத்துறை மூலம் பள்ளி, கல்லூரிகள், மருத்துவமனை விடுதிகள் ஆய்வு செய்யப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அனுமதி இல்லாமலோ, உரிய வசதிகள் இல்லாமலோ செயல்படும் விடுதியில் ஆய்வு நடத்தி 15 நாட்களுக்குள் அதை சரிசெய்ய வேண்டும் என்று நோட்டீஸ் வழங்குவோம்.

அதை உரிய முறையில் செய்யாவிட்டால், விடுதியை மூடுவதற்கு துறை நடவடிக்கை எடுக்கும்.

பெற்றோருக்கு கவுன்சலிங்: மாற்றுத் திறனாளிகளுக்கு மாவட்ட மறுவாழ்வு அலுவலகங்களில் உரிய வழிகாட்டுதல் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். குழந்தைகள் நலத்தைபேணுவதற்கு பெற்றோருக்கும் தொடர்ந்து கவுன்சலிங் வழங்கப்படும்.

குழந்தைகள் வாரத்தில் 6 நாட்களுக்கு தினமும் 3 வேளை துரித உணவு எடுக்கும் நிலை கவலை அளிக்கிறது. பெற்றோர் இதில் உரிய கவனம் செலுத்த வேண்டும். இதுதொடர்பாக துறை சார்பிலும் உரிய வழிகாட்டுதல் வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x