

முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக 9-வது ரகசிய அறிக்கையை சிபிசிஐடி போலீஸார் உயர் நீதிமன்றத்தில் நேற்று தாக்கல் செய்தனர்.
ராமஜெயம் கடந்த 29.3.2012-ம் தேதி திருச்சியில் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கை சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வருகின்றனர். கொலை நடந்து நான்கரை ஆண்டுகள் கடந்த பிறகும் இதுவரை குற்றவாளிகளை போலீஸார் கைது செய்யவில்லை.
இந்நிலையில் ராமஜெயம் கொலை வழக்கை சிபிசிஐடி போலீஸாரிடம் இருந்து சிபிஐக்கு மாற்றக்கோரி ராம ஜெயத்தின் மனைவி லதா, உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கில் சிபிசிஐடி போலீஸார் உயர் நீதிமன்ற கிளையில் இதுவரை 8 ரகசிய அறிக்கைகளை தாக்கல் செய்துள்ளனர்.
ஒவ்வொரு முறையும் சிபிசிஐடி சார்பில், ‘ராமஜெயம் கொலை வழக்கின் விசாரணையின் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், குற்றவாளிகளை நெருங்கிவிட்டதாகவும், அவர்களை கைது செய்ய மேலும் அவகாசம் வேண்டும் என்றும் நீதிமன்றத்தில் கூறப்பட்டு கால அவகாசம் கோரப்பட்டது. இவ்வழக்கு கடந்த ஆகஸ்ட் 10-ம் தேதி விசாரணைக்கு வந்தபோது நீதிபதி 2 மாத கால அவ காசம் வழங்கி விசாரணையை தள்ளிவைத்தார்.
இந்த வழக்கு மதுரை உயர் நீதிமன்ற கிளையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிசிஐடி போலீஸார் விசா ரணை தொடர்பாக 9-வது ரகசிய அறிக் கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். பின்னர் விசாரணையை நாளைக்கு (அக். 19) நீதிபதி தள்ளிவைத்தார்.