Published : 11 Sep 2022 04:45 AM
Last Updated : 11 Sep 2022 04:45 AM
இந்திய ஒற்றுமை நடைபயண த்தின்போது ராகுல்காந்தி அணிந்திருப்பது திருப்பூரில் தயாரான சாதாரண டி-சர்ட் தான் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.
கன்னியாகுமரியில் ஒற்றுமை நடைபயணத்தை தொடங்கிய ராகுல்காந்தி அணிந்து வரும் டி-சர்ட் விலை ரூ.41 ஆயிரத்துக்கும் அதிகமானது என பாஜக மத்தியில் விமர்சனம் எழுந்துள்ளது.
சமூக வலைதளங்களிலும் இதுகுறித்த கருத்துக்கள் பரவலாக விவாதமாகி வருகிறது. இதுகுறித்து கே.எஸ்.அழகிரி நாகர்கோவிலில் நேற்று கூறியதாவது:
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான ஒற்றுமை நடைபயணத்தின் தொடக்கமே தமிழகத்தில் பெரும் மாற்றத்தை கொடுத்துள்ளது. எதிர்பார்த்ததை விட லட்சகணக்கான மக்கள் ராகுலை ஆர்வமாக வந்து சந்தித்து அவருடன் இணைந்து நடைபயணம் செல்கின்றனர்.
அரசியல் ஆதாயத்துக்காக மட்டுமில்லாமல், இந்திய மக்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்துவதற்கான நடைபயணம் இது. நடை பயணத்தின் போது ராகுல் காந்தி அணிந்திருக்கும் டி-சர்ட் திருப்பூரில் தயாரான சாதாரண டிசர்ட் தான்.
திருப்பூரில் உள்ள நிறுவனம் ஒன்றில் நடைபயண நிகழ்ச்சியில் பங்கு பெறுவோர்களுக்கு வழங்குவ தற்காக 20 ஆயிரம் டி-சர்ட்டுகள் தயாரித்தோம். அதைத்தான் அணிந்துள்ளனர். ராகுல் காந்தி அணி வதற்காக படங்கள் இல்லாமல் நான்கு டி-சர்ட்கள் தயார் செய்யப்பட்டுள்ளன.
ராகுலின் எளிமை மக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. இதை களங்கப்படுத்துவதற்காக இவ்விஷயத்தை கையிலெடுத்து பரப்பி வருகின்றனர். ராகுலின் ஒற்றுமை நடைப்பயணம் மாபெரும் வெற்றி பயணமாக தொடங்கியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT