தமிழகத்தில் நீட் தேர்ச்சி சதவீதம் குறையவில்லை: சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

தமிழகத்தில் நீட் தேர்ச்சி சதவீதம் குறையவில்லை: சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
Updated on
1 min read

சென்னை: தமிழகத்தில் நீட் தேர்ச்சி சதவீதம் குறையவில்லை என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: தமிழகத்தில் கடந்த ஆண்டுகளை ஒப்பிடும்போது இந்த ஆண்டுநீட் தேர்வில் அதிக அளவில் மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 2020-21-ம் ஆண்டு 99,610 பேர் நீட் தேர்வு எழுதி 57,215 பேர் தேர்ச்சி பெற்றனர். இதில் 7.5 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் அரசுப் பள்ளியில் படித்த 336 பேர் இளங்கலை மருத்துவ படிப்புக்கு அனுமதிக்கப்பட்டனர்.

2021-22-ம் ஆண்டு 1,08,318 பேர் நீட் தேர்வு எழுதி 58,938 பேர் தேர்ச்சி பெற்றனர். இதில் 7.5 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் அரசுப் பள்ளியில் பயின்ற 445 பேர் இளங்கலை மருத்துவ படிப்புக்கு அனுமதிக்கப்பட்டனர்.

தற்போது 2022-ம் ஆண்டுக்கான நீட் தேர்வை 1,32,167 பேர் எழுதினர். இதில் 17,517 பேர் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இருந்து தேர்வு எழுதியுள்ளனர்.

இதில் 67,787 பேர் தேர்ச்சி பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் நீட் தேர்ச்சி சதவீதம் குறையவில்லை. கடந்தஆண்டு 54 சதவீதமாக இருந்தது. இந்த ஆண்டு தேர்வு எழுதியவர்களின் எண்ணிக்கை அதிகம் என்பதால் தேர்ச்சி சதவீதம் சற்று குறைந்துள்ளது.

இந்த ஆண்டு 51.29 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். நீட்தேர்வில் இருந்து விலக்கு பெறதொடர்ந்து முயற்சித்து வருகிறோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in