Published : 10 Sep 2022 07:12 AM
Last Updated : 10 Sep 2022 07:12 AM
சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச்செயலர் கே.பாலகிருஷ்ணன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: புதிய விமானநிலையங்கள், சாலைகள் விரிவாக்கம் உள்ளிட்டவற்றுக்காக நிலம்கையகப்படுத்தும்போது, அங்குள்ள மக்களை இடம்பெயரச் செய்வது அவசியம்தானா என்பதை பலமுறை ஆய்வு செய்ய வேண்டும்.
ஆனால், பரந்தூர் விமானநிலையத் திட்டத்தைப் பொறுத்தவரை, சட்டரீதியான கடமைகளை மேற்கொள்ளாமல், பெயரளவுக்கு கருத்துக்கேட்புக் கூட்டங்களை அவசரகதியில் நடத்திவிட்டு, விமானநிலையப் பணிகளை தொடங்கவுள்ளதாகத் தெரிகிறது. இந்த நடைமுறை, நிலம் கையகப்படுத்துதல் மற்றும் மறுகுடியமர்த்தல், மறுவாழ்வு சட்ட விதிகளுக்கு முரணானது.
தமிழக அரசின் இத்தகைய அணுகுமுறை, அப்பகுதி மக்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிறந்தமண்ணை விட்டு மக்களை வெளியேற்றுவது, அவர்களின் வாழ்வாதாரத்தைபாதிப்பது மட்டுமின்றி, உணர்வுப்பூர்வமான பிரச்சினையும் ஆகும்.
எனவே, தமிழக அரசு பரந்தூர் விமானநிலையம் அமைப்பது தொடர்பாக வெளிப்படைத்தன்மையுடன், மக்களிடம் முறையான கருத்துக்கேட்புக் கூட்டங்களை நடத்தி, நிலம் கையகப்படுத்துதல் மற்றும் மறு குடியமர்த்தல் ஆகியவற்றை மறுவாழ்வு சட்ட விதிகளுக்கு உட்பட்டு நிறைவேற்ற முன்வர வேண்டும்.
மேலும், விவசாயிகள் கேட்கும் முழுமையான இழப்பீட்டுத் தொகையை வழங்குவதுடன், நிலமற்ற விவசாயத் தொழிலாளிகள், சிறு, குறு விவசாயிகள், அரசு புறம்போக்கு நிலங்களில் சாகுபடிசெய்பவர்கள், நீண்டகாலமாக குடியிருப்பவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் மறுவாழ்வு, மறு குடியமர்த்துதல், வேலை உத்தரவாதம் ஆகியவற்றை உறுதிசெய்ய வேண்டும். கிராமங்களில் குவிக்கப்பட்டுள்ள காவல் துறையினரை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT