தங்க முலாம் பூசிய கட்டிகளை கொடுத்து ரூ.1.5 கோடி மோசடி

தங்க முலாம் பூசிய கட்டிகளை கொடுத்து ரூ.1.5 கோடி மோசடி
Updated on
1 min read

சவுகார்பேட்டையில் தங்க முலாம் பூசிய இரும்பு கட்டிகளை கொடுத்து ரூ.1.5 கோடி மோசடி செய்த நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

சென்னை ஆழ்வார்திருநகரை சேர்ந்தவர் ரகுராம் (48). நகைக்கடையும் சவுகார்பேட்டை துளசிங்கம் தெருவில் அலு வலகமும் வைத்துள்ளார். இவரும் சென்னை உள்ளகரம் வி.வி.சாமிநாதன் தெருவை சேர்ந்த சம்பத்குமாரும் (54). நண்பர்கள்.

“வெளிநாட்டு நண்பர் ரூ.2.5 கோடி மதிப்பிலான தங்கக் கட்டிகளை கொண்டுவந்துள்ளார். அவற்றை ஒன்றரை கோடி ரூபாய்க்கு வாங்கித் தருகிறேன். எனக்கு கமிஷன் கொடுக்க வேண்டும்” என்று ரகுராமிடம் சம்பத்குமார் தெரிவித்துள்ளார். பின்னர் சோதனைக்காக ஒரே ஒரு தங்கக் கட்டியை ரகுராமிடம் கொடுத்தார் சம்பத்குமார். அதை ரகுராம் உரசிப் பார்த்துவிட்டு உண்மையான தங்கக் கட்டிதான் என்று நம்பினார்.

பின்னர் நேற்று முன்தினம் இரவு சவுகார்பேட்டையில் உள்ள தனது அலுவலகத்துக்கு தங்கக் கட்டிகளுடன் வருமாறு சம்பத்குமாரை அழைத்துள்ளார் ரகுராம். அதன்படி 2 பேருடன் அங்கு வந்த சம்பத்குமார் தங்கக் கட்டிகள் இருப்பதாகக் கூறி ஒரு பையை கொடுக்க, ரகுராம் ரூ.1.5 கோடியை அவரிடம் கொடுத்துள்ளார். சம்பத்குமாரும் அவருடன் வந்தவர்களும் பணத்துடன் உடனே அங்கிருந்து புறப்பட்டுவிட்டனர்.

சிறிது நேரத்துக்கு பின்னர் நகை செய்யும் நபரை அலுவலகத்துக்கு வரவழைத்து அவரிடம் தங்கக் கட்டிகளை கொடுத்து, நகைகள் செய்யுமாறு ரகுராம் கூறியிருக்கிறார். அந்த நபர் தங்கக் கட்டிகளை சோதனை செய்தபோது, அவை அனைத்தும் தங்க முலாம் பூசப்பட்ட இரும்பு கட்டிகள் என்பது தெரிந்தது.

இதுகுறித்து யானைக்கவுனி காவல் நிலையத்தில் ரகுராம் புகார் செய்தார். ரகுராம் அலுவலகத்தில் பொருத்தப்பட்டுள்ள கண் காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடந்து வருகிறது. சம்பத்குமார் தலைமறைவாகிவிட்டார். இந்த மோசடி கும்பலை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in