

நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப் படுவதை தடுக்க நீதிமன்றங்கள் முன்வர வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி டி.அரிபரந்தாமன் கூறினார்.
சென்னையில் ஏற்பட்ட வெள்ளத்தால் குடிசை மற்றும் நடைபாதை மக்களிடம் உருவான தாக்கம் குறித்து நடத்தப்பட்ட பொது விசாரணை அறிக்கையை வெளியிடும் நிகழ்ச்சி சென்னை பட்டினப்பாக்கம் சீனிவாசபுரத்தில் நேற்று நடந்தது.
பொது விசாரணை அறிக்கையை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி டி.அரிபரந்தாமன் வெளியிட அதனை சமூக ஆர்வலர் மேதா பட்கர் பெற்றுக் கொண்டார்.
நிகழ்ச்சியில் முன்னாள் நீதிபதி அரிபரந்தாமன் பேசியதாவது:
சென்னையின் பூர்வ குடிமக்கள் மாநகர எல்லைக்குள் குடிசைப்பகுதிகளில் வாழ்கிறார் கள். அவர்களால் தான் வெள்ளம் ஏற்படுகிறது என்று கூறி, சென்னைக்கு வெகு தொலைவில் கண்ணகி நகர், எழில் நகர் , பெரும்பாக்கம் போன்ற பகுதிகளில் கொண்டு போய் விடுகிறார்கள். அவர்கள் வாழ்ந்த குடிசைப்பகுதிகள் இருந்த நிலத்தின் மதிப்பு கோடிக்கணக்கைத் தாண்டும். அவற்றைத் தனியாருக்கும், வணிக ரீதியான பயன்பாட்டுக்கும் பயன்படுத்துகின்றனர்.
உலகிலேயே மாநகர் எல்லைக்குள் உள்ள மிகப்பெரிய சதுப்புநிலம் என்றால் அது பள்ளிக்கரணை தான். ஆனால், அதில் தனியாரோடு சேர்ந்து அரசும் ஆக்கிரமிப்புகளைச் செய்துள்ளது. செம்மஞ்சேரி, கோட்டூர்புரம், ஆர்.ஏ.புரம் போன்ற தென் சென்னை பகுதிகளின் வெள்ளப்பாதிப்புகளை தான் நாம் அதிகம் பேசுகிறோம்.
தென்சென்னையில் கடந்தாண்டு ஐப்பசி, கார்த்திகையில் மட்டும் தான் வெள்ளம் ஏற்ப்பட்டது. ஆனால், வட சென்னையில் ஆண்டுதோறும் வெள்ளம் ஏற்படுகிறது. கொசஸ்தலை ஆற்று நீர் எண்ணூரில்தான் கடலில் கலக்கிறது. 15 அடி ஆழம் இருக்க வேண்டிய கொசஸ்தலை ஆறு, 1 அடி மட்டுமே உள்ளது. அந்த ஆற்றை ஆழப்படுத்தி, அகலப்படுத்தினால், வட சென்னையில் வெள்ளம் ஏற்படாது.
ஆக்கிரமிப்புகளைப் பற்றி பேசுகி றோம். மதுரை உயர் நீதிமன்றம் உலகனேரியில்தான் உள்ளது. நீர் நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு நீதிமன்றங்கள் முன்வர வேண்டும். புறம்போக்கு நிலங்களை மீட்டெடுக்கும் பணியில் மக்கள் சக்தி ஈடுபட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் சமூக ஆர்வலர் மேதா பட்கர், பத்திரிகையாளர் ஞானி உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.